நாட்டை பாதுகாப்பதில் ராணுவத்துக்கு இருக்கும் பங்கு காவல் துறைக்கும் உள்ளது பயிற்சி நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பேச்சு
ராணுவத்துக்கு இருக்கும் பங்கு காவல் துறைக்கும் உள்ளது என்று உதவி ஆய்வாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
நாட்டை பாதுகாப்பதில் ராணுவத்தினருக்கு எத்தனை பங்கு இருக்கிறதோ, அதே அளவு பங்கு காவல் துறையினருக்கும் இருக்கிறது என்று உதவி ஆய்வாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பயிற்சி நிறைவு விழா
சென்னையை அடுத்த வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 1,031 உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
காவல் துறைக்கு காணொலி காட்சி வசதி திட்டம் ரூ.6 கோடியே 10 லட்சம் செலவிலும், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தும் திட்டம் சேலம் மாநகரில் ரூ.3 கோடியே 51 லட்சம் செலவிலும், ராமேசுவரம் கோவில், ஏர்வாடி தர்கா மற்றும் காரைக்குடி நகரம் ஆகிய இடங்களில் ரூ.3 கோடியே 12 லட்சம் செலவிலும், 248 காவல் நிலையங்களுக்கு உட்சுற்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் ரூ.5 கோடியே 95 லட்சம் செலவிலும் என மொத்தம் ரூ.18 கோடியே 68 லட்சம் மதிப்பிலான திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், பென்ஜமின், அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக டி.ஜி.பி. கே.பி.மகேந்திரன், உணவுத்துறை டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பயிற்சி பெற்ற திருநங்கை
விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவர் இன்று உதவி ஆய்வாளர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 254 பெண் உதவி ஆய்வாளர்களும் தங்களது பயிற்சியினை இன்று நிறைவு செய்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 1992-ல் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் முதல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தையும், 2002-ம் ஆண்டு முதல் பெண் கமாண்டோ படையினையும் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
ஜெயலலிதாவின் தாரகமந்திரம்
அமைதி, வளம், வளர்ச்சி என்பது ஜெயலலிதாவின் தாரகமந்திரம். ஒரு நாட்டில் அமைதி நிலவினால் தான் வளமும், வளர்ச்சியும் இருக்கும். நாட்டில் அந்த அமைதியை ஏற்படுத்தக்கூடியவர்கள் காவல்துறையினர் தான். எண்ணற்ற திட்டங்களை காவல்துறை மேம்பாட்டிற்காக ஜெயலலிதா செயல்படுத்தினார்.
ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும் இந்த அரசும் காவல்துறை நலனில் தனி அக்கறை செலுத்துவதோடு, குற்றவாளிகள் மீது காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இந்த அரசு தலையிடாமல், காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளித்து, சட்டம் ஒழுங்கை காப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளது. அதனால் தான், ஜெயலலிதாவின் ஆட்சியிலும், அவர் வழியில் செயல்படும் இந்த ஆட்சியிலும் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்கி வருகிறது.
வேறுபாடின்றி கடமையாற்ற...
காவலர்கள் பணியாற்றுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதுடன், அவர்கள் தங்கள் பணியினை திறம்பட ஆற்றிட பயிற்சி மிகவும் அவசியம் ஆகும். இந்த பயிற்சியகம், இயற்கை சூழலுடன், சிறந்த கட்டமைப்பு வசதிகளுடன், திறமையான பயிற்சியாளர்களையும் கொண்டிருக்கிறது. பல்வேறு புது உத்திகளுடன் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் முதல் கணினி தொடர்பான குற்றங்கள் வரை பல்வேறு குற்ற நிகழ்வுகளை கையாளுவதற்கான பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியின் மூலம், களப்பணி, தலைமைப் பண்பு, ஆய்வுத்திறன், மென் கணினித் திறன் ஆகியவற்றை நீங்கள் நன்கு பெற்று இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒழுக்கம் இருந்தால் தான், விருப்பு வெறுப்பு இன்றி; வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாடு இல்லாமல்; காவல் துறையினர் தங்கள் கடமையை ஆற்ற முடியும். அவ்வாறு கடமையாற்றினால் தான், காவலர்களை மக்கள் மனதார பாராட்டுவார்கள்.
சட்டம் எனும் ஆயுதம்
காவல்துறைக்கு சட்டம் என்பது ஆயுதமாக கருதப்படுகிறது. சட்டம் மனித சேவைக்காக உருவாக்கப்பட்டது தான் என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும். இந்த பயிற்சியின் மூலம், மனித நேயத்துடன் கூடிய அணுகுமுறையை நீங்கள் நிச்சயம் பெற்று இருப்பீர்கள். நீங்கள் அனைவரும் சட்டத்தை கடைப்பிடித்து கடமை உணர்ச்சியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்.
காவல்துறையினர் காலத்திற்கு ஏற்றார்போல் உடல் வலிமையோடு அறிவு கூர்மை மிக்கவர்களாக தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இக்காலத்தில் படித்தவர்கள் கூட தங்களுடைய கல்வி அறிவை தவறான வழியில் பயன்படுத்தி நுட்பமான முறையில் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட குற்றங்களை தடுத்துநிறுத்தி குற்றவாளிகளை கண்டறிவதற்கு காவல்துறையினருக்கு தற்கால தொழில்நுட்ப அறிவு மிகவும் தேவையாக இருக்கிறது. எனவே நீங்கள் கணினி மற்றும் இணைய தொழில்நுட்ப அறிவை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
காணொலி காட்சி
இன்று தொடங்கப்பட்டுள்ள காணொலி காட்சி வசதி திட்டத்தின் மூலம், அனைத்து காவல் ஆணையாளர்கள், மண்டல காவல்துறை தலைவர்கள், சரக காவல்துறை துணைத்தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், தனிப்பட்ட முறையிலோ அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்தோ தொடர்புகொண்டு கலந்துரையாடல் செய்து தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். இதுதவிர ‘பவர் பாயின்ட்’ விளக்கக்காட்சி மூலமாகவும் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.
மொத்தம் இன்று 18 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. நாட்டை பாதுகாப்பதில் ராணுவத்தினருக்கு எத்தனை பங்கு இருக்கிறதோ, அதே அளவு பங்கு காவல் துறையினருக்கும் இருக்கிறது.
நாட்டுக்குள்ளே மக்களோடு மக்களாக நல்லவர்களைப்போல வாழ்ந்து கொண்டிருக்கின்ற தேசவிரோதிகளையும், குற்றவாளிகளையும் கண்டறிவது என்பது காவல்துறையினருக்கு பெரும் சவாலாகும். அவர்களை இனம் கண்டறிய வேண்டும் என்றால், காவல் துறையினருக்கு நுண்ணறிவு தேவை. அத்தகைய நுண்ணறிவும், பகுத்தறிவும் மிக்கது தமிழ்நாடு காவல்துறை என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதே வழியில், தமிழ்நாடு காவல்துறையின் மாண்பையும், சாதனையையும் நீங்கள் மேலும் சிறப்படைய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story