தவறான தகவலால் ரிசர்வ் வங்கி முன்பு மற்றவர்களும் குவிந்ததால் பரபரப்பு பணத்தை மாற்ற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற சலுகை வழங்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் தவறான தகவலால் ரிசர்வ் வங்கி முன்பு குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
சென்னை,
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற சலுகை வழங்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் தவறான தகவலால் ரிசர்வ் வங்கி முன்பு குவிந்ததால் பரபரப்பு நிலவியது. பின்னர் அவர்கள் பணத்தை மாற்ற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பிரதமர் அறிவிப்பு
இந்தியா முழுவதும் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். டிசம்பர் 30-ந் தேதிக்குள் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. ரிசர்வ் வங்கியில் அவர்கள், வங்கி வேலைநாட்களில் அதனை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
தேவைப்படும் ஆவணங்கள்
அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த ஆண்டு நவம்பர் 9 முதல் டிசம்பர் 30-ந் தேதி வரை வெளிநாட்டில் இருந்ததற்கான அத்தாட்சியாக பாஸ்போர்ட் நகல், இந்திய குடியுரிமை கட்டுப்பாட்டு அதிகாரி இடும் முத்திரை அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்களின் நகல், பாஸ்போர்ட்டின் கடைசி பக்கங்கள், அடையாள சான்று ஆவணங்கள், வருமான வரி கணக்கு எண் அட்டை நகல், அனைத்து வங்கி கணக்குகளின் 8.11.16 முதல் 30.12.16 வரையிலான அறிக்கை நகல் ஆகியவற்றை காட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
வெளிநாடு வாழ் இந்தியர்களை 2 வகையாக பிரித்து ரிசர்வ் வங்கி அறிவித்தது. தற்காலிகமாக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் மார்ச் 31-ந் தேதிக்குள், வெளிநாட்டில் தங்கி வேலை பார்க்கும் இந்தியர்கள் ஜூன் மாதத்துக்குள் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
மக்கள் குவிந்தனர்
இதனால் கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி முன்பு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்காலிகமாக வெளிநாடுகளுக்கு சென்றவர்களுக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கடைசி நாளான நேற்று தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்களில் பலர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இல்லை. குறிப்பிட்ட காலத்தில் செல்லாத நோட்டுகளை மாற்ற முடியாமல் போனதற்கு மருத்துவ காரணங்களை பலர் தெரிவித்தனர். ஆனால் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதை ஏற்கவில்லை.
இதனால் அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
அவர்களுடன் வெளிநாடு வாழ் இந்தியர்களும் மணிக்கணக்காக நீண்ட வரிசையில் நின்றனர். இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நேரம் வீணானது.
தவறான தகவல்
இது குறித்து செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாதவர்கள் கூறியதாவது:-
செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், மார்ச் 29 முதல் 31-ந் தேதிக்குள் அதனை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று ‘வாட்ஸ் ஆப்’ மற்றும் சில ஊடகங்களில் தகவல்கள் வந்தன.
ஆனால் இங்கு வந்து கேட்டால் வெளிநாடு வாழ் இந்தியர்களை தவிர வேறு யாருக்கும் அவகாசம் அளிக்கப்படவில்லை என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். தவறான தகவலால் வீணாக அலைய வேண்டியதாகி விட்டது. இது தொடர்பாக தெளிவாக ரிசர்வ் வங்கிக்கு வெளியே அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தால், நாங்கள் மணிக்கணக்கில் இங்கு நின்று கொண்டிருக்க மாட்டோம். பத்திரிகை மூலமாகவும் ரிசர்வ் வங்கி செய்தி வெளியிட்டிருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story