ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த அ.தி.மு.க.(அம்மா) கட்சியை சேர்ந்தவர் கைது


ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த அ.தி.மு.க.(அம்மா) கட்சியை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 31 March 2017 8:15 PM GMT (Updated: 31 March 2017 8:02 PM GMT)

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த அ.தி.மு.க.(அம்மா) கட்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

ராயபுரம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.(அம்மா) கட்சி சார்பில் டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க. (புரட்சிதலைவி அம்மா) கட்சி சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜனதா சார்பில் கங்கை அமரன், தே.மு.தி.க. சார்பில் மதிவாணன் உள்பட 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அ.தி.மு.க.(அம்மா) கட்சியினர் டி.டி.வி.தினகரனுக்கு வாக்களிக்க வலியுறுத்தி ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி தி.மு.க.வினரும், மற்ற கட்சியினரும் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

பணம் பட்டுவாடா

இந்தநிலையில் நேற்று தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் ஒருவர், பெண்களை கணக்கெடுத்து அவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த தி.மு.க.வினர் அவரை சரமாரியாக தாக்கி, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த நபரை ஆர்.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், தண்டையார்பேட்டை சாஸ்திரி நகரைச் சேர்ந்த கருணாமூர்த்தி(வயது 57) என்பதும், தையல்காரரான அவர் அ.தி.மு.க.(அம்மா) கட்சி உறுப்பினர் என்பதும் தெரிந்தது.

அவர், அ.தி.மு.க.(அம்மா) கட்சி வட்ட செயலாளர் லாரன்ஸ் என்பவருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும் தெரிந்தது.

கைது

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், கருணாமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story