கருணாநிதியின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் நாளுக்காக தமிழகம் காத்து இருக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை
சட்டமன்ற வரலாற்றில் வைர விழா காணும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் நாளுக்காக தமிழகம் காத்து இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு கடிதம் வடிவில் எழுதியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தனிச்சிறப்பு
தமிழ்நாடு, தமிழ், தமிழர் நலன் காக்கும் திராவிடப் பேரியக்கமாம் தி.மு.க.வின் சீரிய வரலாற்றில் ஒவ்வொரு நாளுமே பெருமைக்குரியவைதான். இன்றைய இனிய நாள் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக அயராது உழைத்து, இன்றும் நம்மை வழிநடத்துகிற ஆற்றல் மிக்க தலைவர் கருணாநிதி சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த 60-ம் ஆண்டு நிறைவு பெறுகிற தருணம் இது.
சட்டமன்றத் தேர்தல் களத்தில் 13 முறை போட்டியிட்டவர். 13 முறையும் வெற்றியைத் தவிர வேறெதையும் எதிர்கொள்ளாதவர். அத்தனை தேர்தல்களிலும் அண்ணா கண்ட ஒரே இயக்கம், அண்ணா தந்த ஒரே சின்னம் என தி.மு.க.வையும், உதயசூரியனையும் வரலாற்று அடையாளங்களாகக் கொண்டு களம்கண்டு வெற்றிகளைக் குவித்தவர். இந்தப் பெருமை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே வேறெந்த அரசியல் தலைவருக்கும் கிடையாது என்பது தனிச் சிறப்பு.
முன்னோடித் திட்டங்கள்
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கட்சியும், ஆட்சியும் அவரது தோளில் சுமத்தப்பட்ட நிலையில் குடிசைமாற்று வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கை ரிக்ஷா ஒழிப்பு, கண்ணொளித்திட்டம், தொழுநோய் மறுவாழ்வு இல்லம் என பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தினார்.
ஆட்சி செய்யும் வாய்ப்பு அவருக்கு வாய்த்த காலங்களில் பெண்களுக்கான சொத்துரிமை, சமத்துவபுரம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம், 69 சதவீதம் இடஒதுக்கீடு, சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணமில்லாத் தொழிற்கல்வி, நுழைவுத்தேர்வு ரத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அமைச்சரவை, திருநங்கைகளுக்குத் தனி வாரியம், விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி என அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளையும் நிலைநாட்டும் திட்டங்களை செயல்படுத்தியவர் தலைவர் கருணாநிதி.
வைரம் போல மிளிரும்
சட்டப்பேரவையில் மட்டுமின்றி, சட்ட மேலவையிலும் உறுப்பினராக இருந்த சிறப்பு தலைவர் கருணாநிதிக்கு உண்டு. எந்த அவையில் இருந்தாலும் அவருடைய சட்டமன்றப் பணிகள் மக்கள் நலன் சார்ந்தும், ஜனநாயகத்தின் மாண்புகளை மதிக்கும் வகையிலும் இருக்கும். தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது எதிர்க்கட்சிகள் எவ்வளவோ அமளிதுமளிகளை உண்டாக்கியபோதும், அவையின் கண்ணியத்தை காப்பதற்காக பேரவைத்தலைவர் நடவடிக்கைகளை எடுத்தபோதும், அவற்றை எல்லாம் கடந்து, எதிர்க்கட்சியினர் இல்லாமல் அவை நடைபெறக்கூடாது என அவர்களையும் பங்கேற்கச் செய்தவர் தலைவர் கருணாநிதி.
உடல்நலக்குறைவால் தலைவர் கருணாநிதி இப்போது சட்டமன்ற நிகழ்வுகளில் முன்புபோல பங்கேற்க முடியாமல் இருந்தாலும், 60 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் அவர் செயல்பட்ட விதமும், தனித்துவமும், பேராற்றலும் பேரவையிலே பலமிக்க எதிர்க்கட்சியாக விளங்கும் தி.மு.க. உறுப்பினர்களுக்கு இன்றைக்கும் வழிகாட்டுகிறது. விரைந்து நலன்பெற்று மீண்டும் அவர் குரல் அங்கே ஒலிக்கும் நாளுக்காக தமிழகம் காத்திருக்கிறது.
பெருமைமிக்க தமிழக சட்டமன்ற வரலாற்றில் வைரவிழா காணும் தலைவரின் பணிகள் என்றென்றும் வைரம் போல மிளிரும், ஒளிரும்.
இவ்வாறு மு.க. ஸ்டா லின் கூறியுள்ளார்.
Next Story