'ஸ்மார்ட் ரேசன் கார்டு' வழங்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 April 2017 8:41 AM GMT (Updated: 1 April 2017 8:41 AM GMT)

ஸ்மார்ட் ரே‌சன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை கொரட்டூரில் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 1 கோடியே 89 லட்சம் குடும்பத்தினர் ரேசன் கார்டு மூலம், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அத்தியா வசியப் பொருட்கள் பெற்று வருகிறார்கள். ரேசன் கார்டுகள் உள் தாள் இணைக்கப்பட்டு, அட்டையில் தயாரித்து வழங்கப்பட்டிருந்தது. பிறகு மேலும் உள்தாள் இணைக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க பழைய குடும்ப அட்டைகளுக்கு பதில் புதிதாக “ஸ்மார்ட் கார்டு” எனும் “மின்னணு குடும்ப அட்டை” வழங்க அரசு முடிவு செய் தது. இதையடுத்து  தமிழ் நாடு முழுவதும் குடும்ப அட்டைகளில் ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி 99 சதவீதம் நிறைவு பெற்று விட்டது.

அதன் அடிப்படையில் புதிய ஸ்மார்ட்  கார்டுகள் தயாரிக்கப்பட்டன. முதல் கட்டமாக 60 லட்சத்துக்கும் மேலான ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தினமும் சுமார் 5 லட்சம் ஸ்மார்ட் கார்டு அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே விரைவில் ஸ்மார்ட் கார்டு முழுமையாக தயாரிக்கப்பட்டு விடும் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து ரேசன் கார்டுதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் இன்று (சனிக் கிழமை) தொடங்கப்பட்டது. சென்னை பாடியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக சென்னை மாவட்டம் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் குடும்பத்தினருக்கு புதிய ஸ்மார்ட்கார்டு வழங்கப்படும். சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடப்பதால், வருகிற 15-ந் தேதிக்குப் பிறகு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் எண்க ளும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதை ஏற்று தமிழகம் முழுவதும் 1.25 கோடி குடும்பத்தினர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் எண்களையும் இணைத்துள்ளனர்.

62 லட்சம் குடும்ப அட்டை களில் குடும்பத்தில் ஒரு நபரின் ஆதார் எண் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஆதார் எண் இணைத்திருந்தாலும் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதில் குழப்பம் அடையத் தேவை இல்லை.

ஆதார் எண்ணை இணைத்த போது மொத் தம் உள்ள 1.87 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.70 கோடி பேர் தங்கள் செல்போன் எண்ணை கொடுத்துள்ளனர். அந்த எண்ணில் புதிய ஸ்மார்ட் கார்டு தயாரிக்கப்பட்டு விட்டதற் கான குறுஞ்செய்தி தகவல் வரும்.

அந்த தகவலைக் காட்டி குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பொருட்கள் பெறும் கடைகளில் புதிய ஸ்மார்ட்கார்டை பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் புதிய ஸ்மார்ட் கார்டு கேட்டு,ரேசன் கடைகளுக்கு அவசரப்பட்டு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் வரை பழைய ரேசன் கார்டு மூலம் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கலாம். ஆகையால் இந்த விஷயத்திலும் பொதுமக்கள் குழப்பம் அடைய தேவை இல்லை.

புதிய ஸ்மார்ட் கார்டுகள் முழுமையாக வழங்கி முடிப்ப தற்கு 2 மாதத்துக்கும் மேல் ஆகலாம். எனவே அவசரம் தேவை இல்லை.ஸ்மார்ட் கார்டு வாங்கிய பிறகு, அதில் பொருட்கள் வாங்காவிட்டாலும் அந்த கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story