சலுகையை வறட்சி பிடியில் சிக்கித் தவிக்கும் எல்லா மாநிலங்களுக்கும் நீட்டிக்க வேண்டும்


சலுகையை வறட்சி பிடியில் சிக்கித் தவிக்கும் எல்லா மாநிலங்களுக்கும் நீட்டிக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 April 2017 2:45 AM IST (Updated: 2 April 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச விவசாயிகளுக்கு காட்டிய சலுகையை வறட்சி பிடியில் சிக்கி தவிக்கும் எல்லா மாநிலங்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

விவசாயிகள் தற்கொலை

எங்கள் தமிழ்நாட்டு உழவர்கள் ஜந்தர் மந்தரின் வெயில் வீதியில் வெந்து வெந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது உரியவர்களின் பார்வை விழவில்லை என்பது பதற்றம் தருகிறது. வானத்தால் ஏய்க்கப்பட்டவர்களையும், பூமியால் கைவிடப்பட்டவர்களையும் அரசாங்கமும் வஞ்சித்துவிடக்கூடாது. வெடித்துக் கிடக்கும் வயல்களின் ஒவ்வொரு பள்ளத்திலும் ஒரு விவசாயி புதைக்கப்பட்டுவிடக்கூடாது.

இந்திய விவசாயம் கடன் வாங்கிய கடைசி மூச்சில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. விவசாயம் வீழ்ந்து போனால் அதற்கு உலக அரசியல் பொறுப்பு. ஆனால் விவசாயிகள் வீழ்ந்து போனால் அதற்கு உள்ளூர் அரசியலே பொறுப்பு. விதர்பாவில் தொடங்கிய விவசாயத் தற்கொலை மாண்டியாவைத் தாண்டிய பொழுதே அது தமிழ்நாட்டுக்குள் தாவிவிடக்கூடாது என்று எனது மூன்றாம் உலகப்போர் நாவலில் எச்சரிக்க நேர்ந்தது. ஆனால் தஞ்சை விவசாயிகளும் தற்கொலைக்கு ஆளானபோது நான் பதறிப்போனேன்.

மூன்றாம் உலகப்போர்

மூன்றாம் உலகப்போர் ஈட்டிய பணத்தில் 11 லட்சத்தை தற்கொலை புரிந்துகொண்ட விவசாயிகளின் விதவைகளுக்குக் கொடுத்தேன். பாட்டெழுதிக் கூலி வாங்கும் ஒருவன் பணம் கொடுக்கும் நிலை வந்துவிட்டதே என்று, அன்றே பொறுப்புள்ளவர்கள் பதறியிருக்க வேண்டும். இன்று இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 3 லட்சம் என்று புள்ளி விவரம் சொல்லி அழுகிறது.

வேளாண்மையன்றி வேறு தொழில் செய்யத் தெரியாதவர்கள் மட்டும்தான் இன்று வேளாண்மையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவது தேசத்தின் வயிற்றைக் காப்பாற்றுவது போன்றதாகும். மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் அவர்களுக்கு உதவுவதில் அரசியல் பார்க்கக்கூடாது. தனக்கு எதிராகக் குடைபிடித்தவர்களுக்கும் சேர்த்தேதான் மழை பெய்கிறது. தனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் சேர்த்தேதான் ஓர் அரசு இயங்குகிறது.

இதுவே தருணம்

பயிர்க்கடன் தள்ளுபடி என்பதும் பஞ்ச நிவாரணம் என்பதும் எந்த அரசுக்கும் புதியதல்ல. உத்தரப்பிரதேச விவசாயிகளுக்குக் காட்டக்கூடிய சலுகையை வறட்சியின் வன்பிடியில் சிக்கித் தவிக்கும் எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு நீட்டிக்க வேண்டும். இந்திய விவசாயிகள் அழிந்து போனால் பாசன நிலங்கள் எல்லாம் கூட்டாண்மை நிறுவனங்களின் நாட்டாண்மையின் கீழ் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்தியாவில் இன்னும் சுத்தமாகச் செத்துவிடவில்லை சோசலிசம்.

சேவைத் துறைக்கு இரு கண்களையும் காட்டும் மத்திய அரசு உற்பத்தித் துறைக்கு ஓரக்கண்ணாவது காட்ட வேண்டும் என்பதுதான் நிகழ் கணங்களின் தேவை. எங்களைத் தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவமழையும் கூடிப்பேசி வஞ்சித்துவிட்டன. எங்களை வடக்கும் வஞ்சித்து விடக்கூடாது என்று நியாயத்தின் கோட்டுக்குள் நின்று கேட்டுக்கொள்கிறேன். விவசாயத்தைக் காக்கவும் விவசாயிகளை மீட்கவும் இதுவே தருணம்.  இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.


Next Story