உலகில் முதன்முறையாக கண் அழுத்த நோய்க்கு அகர்வால் மருத்துவமனையில் புதிய சிகிச்சை


உலகில் முதன்முறையாக கண் அழுத்த நோய்க்கு அகர்வால் மருத்துவமனையில் புதிய சிகிச்சை
x
தினத்தந்தி 3 April 2017 1:47 AM IST (Updated: 3 April 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

உலகில் முதன்முறையாக அகர்வால் கண் மருத்துவமனையில் கண் அழுத்த நோய்க்கு புதிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

சென்னை,

‘‘லேசர், அறுவை சிகிச்சையை விட நல்ல பலனை கொடுக்கும்’’ என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கண் அழுத்த நோய்

கண் அழுத்த நோய் (கிளோக்கோமா) பாதிப்பு ஏற்பட்டால் அது நரம்பு மண்டலத்தை பாதித்து கண் பார்வை பறிபோகும் நிலை ஏற்படும். இதை சரிசெய்வதற்கு லேசர் மற்றும் அறுவை சிகிச்சை முறை இருந்து வருகிறது.

ஆனால் அந்த சிகிச்சை முழுமையாக இல்லாமல் இருந்தது. இதையடுத்து தற்போது அந்த சிகிச்சைக்கு மாற்றாக புதிய சிகிச்சையை உலகிலேயே முதல்முறையாக சென்னை அகர்வால் கண் மருத்துவமனை அறிமுகம் செய்து பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து அகர்வால் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் அமர் அகர்வால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதிய சிகிச்சை

கண்ணில் இருந்து வரும் நீர் வெளியேற வேண்டும். அப்படி நீர் வெளியேறாமல் கண்ணிலேயே இருக்கும் போது கண் அழுத்தம் ஏற்பட்டு அது நோயாக மாறி விடுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்தை சேர்ந்த சுலோச்சனா (வயது 83) என்ற பெண் மருத்துவமனைக்கு வந்தார்.

அவருக்கு நாங்கள் முதலில் பரிசோதனை செய்து பார்த்த போது கண் அழுத்தம் அதிகமாகவே இருந்தது. அதையடுத்து இந்த புதிய சிகிச்சை முறை (சிங்கிள் பாஸ்போர் துரோ பீபிலோ பிளாஸ்டி) தொடர்பாக அவரிடம் விளக்கி அதன்படி சிகிச்சை அளித்தோம். தற்போது அவருக்கு கண் அழுத்தம் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சுலோச்சனா இதை அப்படியே விட்டிருந்தால் அவருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டு இருக்கும். இந்த புதிய சிகிச்சை முறையானது லேசர் மற்றும் அறுவை சிகிச்சையை விட மிகச்சிறந்த தொழில்நுட்பத்தினால் செய்யப்படுகிறது.

பரிசோதனை செய்வது நல்லது

ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் இந்த கண் அழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 35 வயதை கடந்த ஆண், பெண் இருபாலருக்கும் கண் அழுத்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கான அறிகுறியாக கண்கள் சிவந்து, வலி ஏற்படும். அதை அப்படியே கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் பார்வை தூரம் சுருங்கும்.

ஒரு குடும்பத்தில் யாருக்காவது கண் அழுத்த நோய் இருந்தால், மற்றவர்களும் உடனே கண்களை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. எனவே 40 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் டாக்டர்களை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

அகர்வால் கண் மருத்துவமனையில் கண் அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்ற சுலோச்சனா கூறும்போது, ‘எனக்கு ஏற்பட்ட கண் அழுத்த நோய் பாதிப்புக்கு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றேன். புதிய முறை சிகிச்சையால் தற்போது நலமுடன் இருக்கிறேன்’ என்றார்.


Next Story