வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு


வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு
x
தினத்தந்தி 3 April 2017 9:21 PM GMT (Updated: 3 April 2017 9:21 PM GMT)

மாவோயிஸ்டு பெயரில் வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

சென்னை,

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய இளைஞர் கூட்டமைப்பினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக ‘கியூ’ பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக ரெயில்வே போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தனர். ‘கியூ’ பிரிவு போலீசாரின் எச்சரிக்கையை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களான சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டது.

இந்தநிலையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மேலாளருக்கு, மாவோயிஸ்டு பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் ‘தேன்மொழியான் என்ற பெயரில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாளை(புதன்கிழமை), அல்லது வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் மாவோயிஸ்டு குழு தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும், நாளை மாவோயிஸ்டு எதிர்ப்பாளர்கள் சிலர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்வதால் அந்த ரெயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்’ எழுதப்பட்டிருந்தது.

விசாரணை

இதை படித்து அதிர்ச்சி அடைந்த நிலைய மேலாளர் பிரபாகரன் இதுகுறித்து சென்னை எழும்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனே இந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், ‘கியூ’ பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீஸ் உயர் அதிகாரிகள் உடனே இந்த கடிதம் எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்பது குறித்து விசாரணையை தொடங்கினர்.

அதுமட்டுமல்லாமல், இதற்கு முன்பு மாவோயிஸ்டு அமைப்பினர் விடுத்த மிரட்டல் கடிதத்துடன் தற்போது அனுப்பிய மிரட்டல் கடிதத்தை ஒப்பிட்டு பார்க்க அனைத்து காவல் நிலையத்திற்கும் அந்த கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதம் வந்த தபால் நிலையத்திற்கு போலீசார் சென்று எங்கிருந்து அந்த கடிதம் வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

பொதுவாக, ரெயில் நிலையத்திற்கு வழக்கமாக வரும் மிரட்டல் போன் அழைப்பு போல் இல்லாமல் இந்த முறை கடிதத்தில் வந்துள்ளதால் போலீசார் இதை அலட்சியப் படுத்தாமல் அதிக கவனம் செலுத்தி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடி குண்டு வைப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வழக்கத்தை விட அதிக அளவில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாமல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் பலத்த சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சந்தேகத்துக்குரிய நபர்களை போலீசார் பிடித்து விசாரித்தும் வருகின்றனர்.


Next Story