ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இல்லை -மு.க.ஸ்டாலின்


ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இல்லை -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 April 2017 4:47 PM IST (Updated: 4 April 2017 4:47 PM IST)
t-max-icont-min-icon

ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை விமான நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மே மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளதே?.
 
பதில்:- மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று ஏன் சொல்கிறது என்றால், இப்போது தேர்தலை நடத்தினால், சுப்ரீம் கோர்ட்டால் சிறை தண்டனைப் பெற்று, இப்போது பெங்களூரு சிறையில் இருக்கக்கூடிய சசிகலாவின் பினாமி ஆட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதால், அதை நடத்துவதற்கு தயாராக இல்லை. அதனால் தான் மாநில தேர்தல் ஆணையம் மூலமாக இப்போது தேர்தல் நடத்த முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். நீதிமன்றம் அதை கண்டித்திருக்கிறது. தேர்தலை நடத்தியே தீர வேண்டும், அப்படி நடத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

கேள்வி:- ஆர்.கே.நகரில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும், பரிசு பொருள்கள் வழங்குவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வருவது பற்றியும், நேற்று அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டு இருப்பது பற்றியும் உங்கள் கருத்து என்ன?.

பதில்:- குறிப்பிட்ட சில அதிகாரிகள் மீது நாங்கள் புகார் கொடுத்து இருந்தோம். ஏனெனில், அவர்கள் எப்போதும் ஆளும் கட்சிக்கு துணையாக இருக்கக்கூடியவர்கள். கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து இருந்தபோது எந்தெந்த அதிகாரிகள் அங்கு இருந்தார்கள், யாரெல்லாம் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தார்கள் என்பதை தெரிவித்து இருந்தோம். அந்த அதிகாரிகளை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக இன்றைக்கு மத்தியில் உள்ள தேர்தல் ஆணையம், இங்கிருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட எல்லா அதிகாரிகளையும் மாற்றி இருப்பது, உள்ளபடியே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இது 12-ம் தேதி தேர்தல் நடந்து முடிகிற வரை தொடர வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்து.

கேள்வி:- டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?.

பதில்:- நாங்கள் ஏற்கனவே இதுபற்றி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சி, குறிப்பாக அந்த துறையின் மந்திரியோ அல்லது பிரதமரோ விவசாயிகளை அழைத்துப்பேசி, இதற்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கருத்து. அதுமட்டுமல்ல, இங்கு பினாமி முதல்-அமைச்சராக இங்கிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி உடனடியாக டெல்லிக்கு சென்று, விவசாயிகளை சந்தித்து, அவர்களிடத்தில் பேசி, பிரதமரை சந்தித்து விவசாயிகளின் பிரச்சினைகளை தெரிவித்து, தீர்வுகாண வேண்டும்.

கேள்வி:- இந்த ஆட்சியில் வறட்சிக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை, விவசாயிகளுக்கான பாசன நீர் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையே?.

பதில்:- இப்போது இருக்கக்கூடிய ஆட்சியில் நிச்சயமாக, உறுதியாக இதற்கு எல்லாம் தீர்வு காணக்கூடிய வாய்ப்பு கிடையாது. காரணம் என்னவென்றால், அவர்கள் இப்போது இரு அணிகளாக பிரிந்து, தங்களுடைய பதவிகளை தக்கவைத்துக்கொள்வதில் குறியாக இருக்கிறார்களே தவிர, மக்களைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். 

Next Story