மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் புதிய துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை பேட்டி


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் புதிய துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை பேட்டி
x
தினத்தந்தி 30 May 2017 10:00 PM GMT (Updated: 2017-05-31T00:56:49+05:30)

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை கூறினார்.

சென்னை,

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழக பட்டியலில் சேரும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை கூறினார்.

புதிய துணைவேந்தர்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக பி.பி.செல்லத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 27-ந் தேதி பொறுப்பு ஏற்றார். இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புதிய துணைவேந்தர் செல்லத்துரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

கல்வித்தரம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியை மேம்படுத்த நிபுணர் குழு அமைக்க திட்டமிட்டுள்ளேன். இந்த குழு ஆராய்ச்சி தொடர்பான திட்டங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளும். ஆராய்ச்சி திட்ட அறிக்கைக்கு முழுமையாக நிதி கிடைக்கும் வகையில், அதனை தேசிய அளவிலான நிபுணர்கள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

இதன்மூலம் உலக அளவில் முதல் 200 இடங்களை பிடித்துள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியலில் மதுரை பல்கலைக்கழகமும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தின் பட்டியலில் சேரும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும். சமுதாயத்துக்கு பயன்படும் வகையிலும், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் வகையிலும் தரமான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

பல்கலைக்கழக அளவிலான பாடத்திட்டத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்துவதற்காக பல்கலைக்கழகங்களில் பாடத்திட்ட மையங்களை ஏற்படுத்துவது என்பது மற்றொன்று ஆகும். பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பணி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நிதி உதவி தங்கு தடையின்றி வழங்கப்படும்.

திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

இளம் ஆராய்ச்சியாளர்கள் தங்களது படைப்புகளை பிரசுரம் செய்ய சர்வதேச அளவில் ஆய்வுக்கட்டுரை புத்தகம் வெளியிடப்படும். கல்வியின் தரத்தை உயர்த்தி சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் உருவாக்கப்பட உள்ளது.

காப்புரிமை என்பது பல்கலைக்கழகத்தில் மகுடம் போன்றது. பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிக்கும் புதிய கண்டுபிடிப்புகளை காப்புரிமைக்காக பதிவு செய்ய வழிகாட்டப்படும். இந்த பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளாகவும், ஆசிரியர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து 100 கோடி ரூபாய்க்கு ஒருங்கிணைந்த நிதி திட்டம் உருவாக்கப்படும். இதன்மூலம் பொருளாதார சிக்கல் ஏற்படாத வகையில், பல்கலைக்கழகத்தை பார்த்துக்கொள்ள முடியும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2,400 மாணவர்கள் படித்து வருகின்றனர். கணினி அறிவியல் படித்த மாணவர்கள் மட்டுமே கணினி அறிவை பெற்றவர்களாக உள்ளனர். எனவே மற்ற மாணவர்களும் கணினி அறிவு பெற 300 கணினியுடன் கூடிய மையம் இணையதளம் வசதியுடன் ஏற்படுத்தப்படும்.

எம்.பி.ஏ. போன்ற உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் ஒரு செமஸ்டர் முழுவதும் வெளிநாட்டில் தங்கியிருந்து படிப்பை மேற்கொள்ள திட்டம் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாழ்க்கை குறிப்பு

துணைவேந்தர் பி.பி.செல்லத்துரையின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் கிராமம் ஆகும். இவரது மனைவி எஸ்தர் விஜயராணி. விருதுநகரில் உள்ள வி.வி.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூாரியில் வரலாற்றுத்துறை இணை பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இவர்களுக்கு லிபியா நான்சி என்ற மகள் உள்ளார். இவர் நெல்லையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

துணைவேந்தர் செல்லத்துரை வரலாற்று பாடத்தில் பி.எச்.டி. முடித்துள்ளார். 20 ஆண்டுகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளைஞர் நலத்துறை பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றி உள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ‘டீன்’ ஆக 5 ஆண்டுகளும், பெரியார் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக 5 ஆண்டுகளும் பணியாற்றி உள்ளார். 37 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 8 புத்தகங்கள் எழுதி உள்ளார். 151 ஆராய்ச்சி கட்டுரைகளை பல்வேறு கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார். கல்வி தொடர்பாக 14 வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

Next Story