கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் காலமானார்


கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் காலமானார்
x
தினத்தந்தி 2 Jun 2017 8:46 AM IST (Updated: 2 Jun 2017 8:46 AM IST)
t-max-icont-min-icon

கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70.

சென்னை, 

கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.

1937-ஆம் ஆண்டு நவம்பர் 9-ல் மதுரை மாவட்டத்தில் பிறந்த அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயின்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.

இவர் பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை போன்ற பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 1999-ம் ஆண்டு ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றிருந்தார். மேலும் இவர் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார். ஹைக்கூ, கஜல் உள்ளிட்ட பிறமொழி இலக்கியங்களை தமிழில் புனைந்திருக்கிறார். 

Next Story