சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் படுகொலை; 5 பேர் கைது
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை எம்.ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம், அண்ணா தெருவை சேர்ந்தவர் குமார் என்ற சின்னகுமார் (வயது 40). இவர் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின்(அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா) பிரமுகர். இதற்கு முன்பு இவர் ஜெ.தீபா அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், பிரபல ரவுடியான இவர் மீது, 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரியல் எஸ்டேட் தரகராகவும் இருந்து வந்தார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி தனது 3 குழந்தைகளுடன் திருவண்ணாமலையில் வசிக்கிறார். 2–வது மனைவி தனது குழந்தையுடன், சின்னகுமாருடன் வாழ்ந்து வந்தார்.
படுகொலைஇந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில், சின்னகுமார் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக குத்தினார்கள்.
இதில் அவர் படுகாயம் அடைந்து கீழே சாய்ந்தார். இதையடுத்து அவரை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சின்னகுமார் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
5 பேர் கைதுஇதனை தொடர்ந்து சென்னை மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் அன்பு ஆகியோர் மேற்பார்வையில், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர்கள் வின்சென்ட் ஜெயராஜ், சுப்பிரமணி தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதன் பின்னர் போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ரத்தக்கறை படிந்த சட்டையுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் சலவை சீனு என்ற சீனிவாசன் (41) என்பதும் பிரபல ரவுடியான அவர் மீதும் பல வழக்குகள் உள்ளதும், சின்னகுமாரை கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சீனிவாசனை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது நண்பர்களான சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த மணி என்ற மணிகண்டன்(21), பாலு என்ற பாலமுருகன் (22), கமலக்கண்ணன் (20), பிரபாகரன் என்ற பிரபு (21) ஆகியோரையும் இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்பின்பு சீனிவாசன் போலீசில் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:–
நானும், சின்னகுமாரும் நண்பர்கள். அவரது வீட்டுக்கு அருகில்தான் நானும் வசித்தேன். என் வளர்ப்பு தாயார் நாகசத்யாவுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், நான் கூடுவாஞ்சேரிக்கு வந்து விட்டேன்.
நாகசத்யா தான் வசித்த வீட்டை ரியல் எஸ்டேட் தரகர் தொழில் செய்து வந்த சின்னகுமார் மூலம் விற்றார். அதற்காக ரூ.22 லட்சம் தர வேண்டும் என நான் கேட்டேன். ஆனால் எனக்கு பணத்தை தர விடாமல் சின்னகுமார் சதி செய்து தடுத்து விட்டார்.
இதனால் கோபம் அடைந்த நான், எனது நண்பர்கள் உதவியுடன் சின்னகுமாரை தீர்த்துக்கட்டினேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கொலை செய்ய பயன்படுத்திய 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.