சேலம் அருகே பரபரப்பு: பஸ்சில் 15 வயது சிறுமி கற்பழிப்பு; கண்டக்டர்-2 டிரைவர்கள் கைது
சேலம் அருகே பஸ்சில் 15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள். இதுதொடர்பாக அந்த பஸ்சின் கண்டக்டர், 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர்,
அந்த பஸ்சில் 15 வயது சிறுமி உள்பட சில பயணிகளே இருந்தனர். இரவு 9 மணியளவில் நாரணம்பாளையத்தை பஸ் வந்தடைந்தது. பயணிகள் கீழே இறங்கிச்சென்றனர். ஆனால், அந்த சிறுமி மட்டும் கீழே இறங்கவில்லை.
சிறிது நேரத்துக்குப்பின் சிறுமி பஸ்சில் இருந்து கீழே இறங்கி, ‘காப்பாற்றுங்கள்; காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டப்படி ஓடினாள். உடனே அந்த கிராம மக்கள் திரண்டு வந்து சிறுமியிடம் விவரம் கேட்டனர்.
கற்பழிப்பு
அப்போது பஸ்சில் வைத்து கண்டக்டரும், டிரைவர்களும் சேர்ந்து தன்னை கற்பழித்து விட்டதாக கூறி அவள் கதறினாள். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் 3 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்களை ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் பிடிபட்ட 3 பேரிடமும், அந்த சிறுமியிடமும் விசாரணை நடத்தினார்கள். இதில், சேலம் அழகாபுரத்தை சேர்ந்த 15 வயதுடைய அந்த சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்துள்ளாள். இவள் தனது பெற்றோர் வேலைக்கு சென்றவுடன் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுவது வழக்கம். அதன்பின்னர் உறவினர்கள் அவளை அழைத்து வந்து வீட்டில் விட்டுச்செல்வார்கள். சில நேரங்களில் அவளாகவே வீடு திரும்பிவிடுவாள்.
கண்டக்டரிடம் அறிமுகம்
இதேபோல் கடந்த 3-ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறிய அந்த சிறுமி சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு வந்து பஸ் ஏறி ஜங்ஷன் பகுதிக்கு சென்றாள். அன்று இரவு ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தங்கிக்கொண்டாள். மறுநாள் தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளாள். பின்னர் நேற்று முன்தினம் மதியம் மீண்டும் பஸ் ஏறி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தாள். அங்கிருந்த தனது நண்பர் விஜயன் என்பவருடன், ஜங்ஷன் வந்த இந்த தனியார் பஸ்சில் ஏறினாள்.
அப்போது பஸ் கண்டக்டர் பெருமாளிடம் அந்த சிறுமியை விஜயன் அறிமுகம் செய்துவைத்தார். பின்னர் அந்த பஸ்சிலேயே இரவு வரை டிரைவர், கண்டக்டரிடம் பேசிக்கொண்டு அவள் பயணம் செய்துள்ளாள். இரவு 8.15 மணிக்கு சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு பஸ் வந்தவுடன் அந்த சிறுமி கீழே இறங்க முயன்றுள்ளாள்.
பஸ் பறிமுதல்
ஆனால், கண்டக்டர் பெருமாள், மாற்று டிரைவர் முருகன் ஆகியோர் கீழே இறங்க விடாமல் தடுத்துள்ளனர். பின்னர் பேசிக்கொண்டே அவளை இரவு 9 மணியளவில் அதே பஸ்சில் நாரணம்பாளையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கும் அந்த சிறுமியை கீழே இறங்க விடாமல் தடுத்து மிரட்டி உள்ளனர்.
மற்ற பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்றதை உறுதி செய்த 3 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பஸ்சை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
கைரேகை நிபுணர்கள் பஸ்சில் இருந்த தடயங்களை சேகரித்தனர். சம்பவம் குறித்து 9 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்டக்டர் பெருமாள், டிரைவர்கள் மணிவண்ணன், முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமியிடம் வருவாய் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்களும் விசாரணை நடத்தினர். இதற்கிடையே சிறுமி கற்பழிக்கப்பட்டதை கண்டித்து ஓமலூரில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.