டி.டி.வி.தினகரனுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து சந்திப்பு; எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி துணைச் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
சென்னை,
‘கட்சி பணியில் மீண்டும் ஈடுபடுவேன்’ என்று அவர் அறிவித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் 27 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
60 நாட்கள்பின்னர், பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘இனியும் டி.டி.வி.தினகரனுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள மாட்டோம்’ என்று கூறினார்.
அந்த நேரத்தில், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த டி.டி.வி.தினகரன், ‘என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது. 60 நாட்கள் காத்திருந்து கட்சி நடவடிக்கைகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளேன்’ என்றார்.
11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடி.டி.வி.தினகரன் பெங்களூரு சென்றபோது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்த 11 எம்.எல்.ஏ.க்களும் அவருடன் சென்றனர்.
அதாவது, தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி தொகுதி), வெற்றிவேல் (பெரம்பூர்), இன்பதுரை (ராதாபுரம்), பார்த்திபன் (சோழிங்கர்), சுப்பிரமணியன் (சாத்தூர்), தங்கதுரை (நிலக்கோட்டை), ஜக்கையன் (கம்பம்), ஏழுமலை (பூந்தமல்லி), கதிர்காமு (பெரியகுளம்), ஜெயந்தி (குடியாத்தம்), பாலசுப்பிரமணியன் (ஆம்பூர்) ஆகிய 11 பேர் சென்றனர். எம்.பி.க்கள் விஜிலா சத்தியானந்த், நாகராஜூ ஆகியோரும் உடன் சென்றனர்.
மேலும் 13 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுஇந்த நிலையில், நேற்று காலை மேலும் பல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், டி.டி.வி.தினகரனை சந்திப்பதற்காக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு வரத்தொடங்கினர்.
ஒருவர் பின் ஒருவராக அங்கு வந்ததால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை வரை, மேலும் 13 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர். அவர்கள் விவரம் வருமாறு:–
பழனி (ஸ்ரீபெரும்புதூர்), ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு), முத்தையா (பரமக்குடி), செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), தோப்பு வெங்கடாச்சலம் (பெருந்துறை), பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), தூசி மோகன் (செய்யாறு), பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), முருகன் (அரூர்), உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்), சந்திர பிரபா முத்தையா (ஸ்ரீவில்லிபுத்தூர்), கோதண்டபாணி (திருப்போரூர்).
கட்சியை வளர்க்க ஆலோசனைடி.டி.வி.தினகரன் வீட்டில் காலையில் தொடங்கிய ஆலோசனை கூட்டம், மதியம் 3 மணி வரை நீடித்தது. அதன் பிறகு, முதலில் வெளியே வந்த வெற்றிவேல், செந்தில் பாலாஜி ஆகியோரிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் அவர்கள் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றனர்.
பழனியப்பன் நிருபர்களிடம் கூறும்போது, ‘கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் டி.டி.வி.தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை. 25 எம்.எல்.ஏ.க்கள் அவரை சந்தித்துள்ளோம்’ என்றார்.
முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. பெருமாள், தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் உள்பட பலரும் டி.டி.வி.தினகரனை நேற்று சந்தித்து பேசினார்கள். பின்னர், வி.பி.கலைராஜன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கட்சியை வளர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்’’ என்றார். தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வி.பி.கலைராஜன் அளித்த பதில்கள் வருமாறு:–
3–வது அணியா?கேள்வி:– அமைச்சர் ஜெயக்குமார் நேற்று, எங்களுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர் கட்சியை விட்டு ஒதுங்கியே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே?.
பதில்:– கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் கிடையாது.
கேள்வி:– அ.தி.மு.க.வில் 3–வது அணி உருவாகிவிட்டதா?.
பதில்:– 3–வது அணி எதுவும் உருவாகவில்லை.
கேள்வி:– அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?.
பதில்:– வாய்ப்பு எதுவும் இல்லை.
கேள்வி:– இன்றைக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் வந்து டி.டி.வி.தினகரனை சந்தித்து இருக்கிறார்கள்?.
பதில்:– 29 எம்.எல்.ஏ.க்கள் வந்தார்கள்.
கருத்தை ஏற்க முடியாதுகேள்வி:– டி.டி.வி.தினகரனை வந்து எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பது எதற்காக?.
பதில்:– கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் அவர். அவர் மீது பொய் வழக்கு போட்டு திகார் சிறையில் அடைத்திருந்தார்கள். அது பொய் வழக்கு என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது. வெளியே வந்த அவரை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசுகிறார்கள்.
கேள்வி:– ஆட்சியில் இருப்பவர்கள் டி.டி.வி.தினகரனை ஒதுக்கிவைத்ததாக கூறிய நிலையில், எம்.எல்.ஏ.க்கள் அவரை சந்தித்து இருக்கிறீர்கள்?.
பதில்:– இதை எடப்பாடி பழனிசாமி சொன்னாரா?. கட்சியின் தலைமை பொறுப்பை வகிப்பவர் பொதுச் செயலாளர். டி.டி.வி.தினகரன் துணைப் பொதுச் செயலாளர். எனவே, அவர்கள் சொல்லும் கருத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர, ரோட்டில் போய் வருகிறவர்கள் எல்லாம் சொல்கின்ற கருத்தை ஏற்க முடியாது.
கட்சியை விட்டு போய்விடவில்லைகேள்வி:– அப்படி என்றால், உங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது அல்லவா?.
பதில்:– பிளவு ஏற்படவில்லையே.
கேள்வி:– டி.டி.வி.தினகரன் கட்சியை விட்டு ஒதுங்கி இருப்பேன் என்று கூறியிருந்தாரே?.
பதில்:– அப்படி கூறியது உண்மை தான். இன்றைக்கு அவர் 40 நாட்கள் கழித்து சென்னைக்கு வந்திருக்கிறார். இடைப்பட்ட நாட்களில் என்ன நடந்தது என்பதை அவர் விசாரிக்க வேண்டும் அல்லவா. அதைத் தான் விசாரித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஒதுங்கியிருப்பேன் என்று தான் கூறியிருக்கிறார். கட்சியை விட்டு போய்விட்டேன் என்று கூறவில்லை. அவரை யாரும் ஒதுக்கவில்லை. ஒதுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பொதுச் செயலாளருக்குத்தான் இருக்கிறது. அதனால், ஒரு அமைச்சர் பேசுவதை வைத்து இவ்வாறு சொல்லக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர், எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
ஜெயக்குமார் மீது நடவடிக்கைகேள்வி:– டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வில் செயல்பட முடியாது என்று அமைச்சர் கூறுகிறார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?.
பதில்:– எங்கள் கட்சி பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இவர்கள் 2 பேரும் தான் கட்சி நடவடிக்கைகளை எடுக்க முடியும். அதை மீறி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கின்ற கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அது செல்லுபடி ஆகாது.
கேள்வி:– பெரும்பாலான அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமியிடம் தான் இருக்கிறார்கள். இங்கு நீங்கள் கூட்டம் போடும் அதே வேளையில், அங்கும் எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
பதில்:– எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அங்கு நடக்கிறது. இங்கு துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் அவரை சந்திக்க 35 எம்.எல்.ஏ.க்கள் இங்கு வந்துவிட்டோம். 10 மாவட்ட செயலாளர்கள் வந்துவிட்டார்கள். தினமும் எத்தனை பேர் வருகிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.
கேள்வி:– என்ன ஆலோசனை செய்கிறீர்கள்?.
பதில்:– ஒன்றும் கிடையாது.
கேள்வி:– அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.
பதில்:– நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அந்த செய்தி மிக விரைவில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசுக்கு நெருக்கடிஅ.தி.மு.க.வில் சபாநாயகர் உள்பட 135 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 12 எம்.எல்.ஏ.க்கள் சென்றதால் எடப்பாடி பழனிசாமிக்கு 122 பேர் (சபாநாயகர் தவிர) ஆதரவு இருந்தது.
இப்போது தினகரனுக்கு ஆதரவாக 29 எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு இருப்பதால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.