எங்களுடைய பொது செயலாளர் சசிகலா தான்; ‘அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரனை சந்திப்பதில் தவறு இல்லை’


எங்களுடைய பொது செயலாளர் சசிகலா தான்; ‘அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரனை சந்திப்பதில் தவறு இல்லை’
x
தினத்தந்தி 8 Jun 2017 3:15 AM IST (Updated: 7 Jun 2017 7:25 PM IST)
t-max-icont-min-icon

எங்களுடைய பொதுச்செயலாளர் சசிகலா தான். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை சந்திப்பதில் தவறு இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

சென்னை,

பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நேற்று காலை தலைமை செயலகம் புறப்படுவதற்கு தயாராக இருந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ராஜேந்திர பாலாஜி அளித்த பதில்களும் வருமாறு:–

தவறு இல்லை

கேள்வி:– அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசி வருகிறார்களே...?

பதில்:– கட்சி துணை பொதுச்செயலாளரை தானே அவர்கள்(அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்) பார்த்தார்கள். வேறு யாரையும் பார்க்கவில்லையே. இதில் தவறு எதுவும் இல்லையே.

கேள்வி:– அமைச்சர்கள் எல்லாம் டி.டி.வி. தினகரனை சந்திப்பீர்களா?

பதில்:– வேலை இருந்தால் எல்லாம் போய் பார்ப்பார்கள்.

அ.தி.மு.க. விஸ்வரூபம் எடுக்கும்

கேள்வி:– உங்களுடைய பொதுச்செயலாளர் யார்?

பதில்:– எங்களுடைய பொதுச்செயலாளர் சின்னம்மா(சசிகலா). அவர் தான் பொதுச்செயலாளராக இருக்கிறார்.

கேள்வி:– சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கினால் தான் இணைப்புக்கான பேச்சுவார்த்தை என்று எதிர் அணியினர் கூறுகின்றனரே?

பதில்:– அ.தி.மு.க. பெரிய கட்சி. அதில் சில மாற்று கருத்துகள் இருக்கத் தான் செய்யும். எல்லாம் சரியாகி விடும். பிரச்சினை வரும் போது எல்லாம் அ.தி.மு.க. விஸ்வரூபம் எடுக்கும்.

கேள்வி:– டி.டி.வி.தினகரன் கட்சி பணியில் ஈடுபட முடியாது என்று அமைச்சர் ஜெயகுமார் பேட்டி அளித்து இருக்கிறாரே?

பதில்:– அந்த பேட்டியை நான் பார்க்கவில்லை. நான் வெளி ஊரில் இருந்தேன்.  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

பால் கலப்படம் பிரச்சினை

பால் கலப்படம் விவகாரம் குறித்து ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:–

பால் கலப்படம் பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் போடப்பட்டு இருக்கிறது. ஐகோர்ட்டு நீதிபதிகள் இப்படி தான் நடக்க வேண்டும் என்று ஒரு வழிமுறையை சொல்லி இருக்கிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி அரசு செயல்படும்.

பால் கலப்படம் தொடர்பாக சோதனை அறிக்கை முடிவை இப்போது சொல்ல முடியாது. தற்போது எல்லா நிறுவனங்களும் தங்களுடைய பணியாளர்களிடம் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். எந்தவித தவறும் நடக்க கூடாது என்று ஆலோசனை வழங்கி உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

கோர்ட்டில் வழக்கு இருப்பதால் நான் வெளிப்படையாக எதையும் சொல்ல கூடாது. கோர்ட்டு முடிவின்படி அரசு செயல்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்திருப்பது அ.தி.மு.க.வில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story