சட்டசபை கூட்டத்தொடரில் தி.மு.க. செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்; மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தி.மு.க. செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடர்பாக நேற்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–கேள்வி:– அலுவல் ஆய்வு கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டு உள்ளது?
பதில்:– அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, சட்டப்பேரவை கூட்டம் தொடர்பாக சில கோரிக்கைகளை வைத்தோம். அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அதனடிப்படையில் மானிய கோரிக்கைகளுக்கான தேதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.
மகிழ்ச்சிகேள்வி:– சட்டப்பேரவையில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை திறப்பதற்கு பிரதமர் மோடி தேதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்:– அந்த நிகழ்ச்சிக்கு தேதி கொடுத்த பிறகு அதுகுறித்து எங்களுடைய கருத்துகளை தெரிவிப்போம்.
கேள்வி:– பேரவை கூட்டத்தொடரில் தி.மு.க.வின் செயல்பாடு எந்த வகையில் இருக்கும்?
பதில்:– மக்கள் எதிர்பார்க்கக்கூடிய வகையிலும், நீங்கள்(பத்திரிகையாளர்கள்) மகிழ்ச்சியடையும் வகையிலும் தி.மு.க.வின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். எனவே, அனைவரும் சற்று பொறுத்திருக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
கே.ஆர்.ராமசாமிசட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி கூறியதாவது:–
தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிநீர் பற்றாக்குறை மிகமிக மோசமாக உள்ளது. விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இதுபற்றி சட்டமன்றத்தில் விவாதிப்போம். இந்தப் பிரச்சினைகளில் அரசு செயல்படவில்லை.
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இந்த அரசு அமைந்திருந்தது. அவர்கள் செய்கிற தவறை சுட்டிக்காட்டி பலமுறை நாங்கள் விவாதித்திருக்கிறோம். அவர்கள் ஒன்றாக அல்லது இரண்டாக இருக்கிறார்கள் என்பது பற்றி பிரச்சினை இல்லை. அவர்கள் தவறு செய்கிறார்கள், சரியாக ஆட்சி செய்யவில்லை, செயலற்ற அரசாக இருக்கிறது என்பதுதான் பிரச்சினை. அதுபற்றித்தான் சட்டசபையில் முழுமையாக விவாதிக்க இருக்கிறோம்.
சட்டமன்றத்தை மேலும் சில நாட்கள் கூட்டியிருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆனாலும் அதை ஏற்றுக்கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
முகமது அபுபக்கர்இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர் கூறியதாவது:–
மானிய கோரிக்கையின்போது அவையை நடத்துவதற்கு நாங்கள் சொன்ன சில கோரிக்கைகளை ஏற்றிருக்கிறார்கள். இன்னும் கூடுதலான நாட்களை ஒதுக்கி இருக்கலாம். எதிர்க்கட்சிகள் விரிவாக விவாதிக்கும் அளவுக்கு கூட்ட தொடரை நடத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை சபாநாயகர் ஏற்று, முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.