உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டிக்கக்கூடாது என்று வழக்கு
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை தாக்கல் செய்யுங்கள். வழக்கமான முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டனர்.
சென்னை,
ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு மூத்த வக்கீல் என்.எல்.ராஜா ஆஜராகி, ‘தமிழக முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற இருந்தது. இந்த தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை பின்பற்றி முறையாக வெளியிடவில்லை என்பதால், இந்த ஐகோர்ட்டு தேர்தலை ரத்து செய்தது. மேலும், புதிய அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும். அதுவரை, சிறப்பு அதிகாரிகளை நியமித்து, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை மேற்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதே நேரம், தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, தனி அதிகாரிகளை நியமித்துள்ளது. இந்த தனி அதிகாரிகளின் பதவி காலம் ஜூன் 30–ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இவர்களது பதவி காலத்தை நீட்டிக்கக்கூடாது என்று மனு தாக்கல் செய்துள்ளேன். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று கூறினார்.
இதற்கு நீதிபதிகள், வழக்கை தாக்கல் செய்தால், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றனர்.
இதையடுத்து, மூத்த வக்கீல் விஜயன் ஆஜராகி, ‘மருத்துவ கல்விக்கான ‘நீட்’ நுழைவு தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி புதிய வழக்கு தொடர உள்ளேன். இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும்’ என்றார்.