வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் தகவல்


வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 8 Jun 2017 2:15 AM IST (Updated: 8 Jun 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை காலத்தில் நாடு முழுவதும் இயல்பான அளவுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகத்திலும் ஓரளவு தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

அதற்கு அச்சாரமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன், சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

உத்திரமேரூரில் கனமழை

தென்மேற்கு பருவமழை தமிழக பகுதிகளில் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்தது. அதில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக உத்திரமேரூரில் 11 செ.மீ. (சென்டி மீட்டர்) மழை பெய்தது.

தொடர்ந்து ஆலங்காயத்தில் 9 செ.மீ., வானூர், செங்கத்தில் தலா 6 செ.மீ., மரக்காணம், போளூர், வாணியம்பாடியில் தலா 5 செ.மீ., பெரம்பலூர், வேலூர், சிவகங்கையில் தலா 4 செ.மீ., குடியாத்தம், ஸ்ரீபெரும்புதூர், செங்குன்றம், கேட்டி (நீலகிரி மாவட்டம்), தாம்பரம், பண்ருட்டி, மதுராந்தகம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

2 நாட்களுக்கு மழை

மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சம் 35 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியசும் வெப்பம் இருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story