மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர்; டெல்லியில் இருந்து ரெயில் மூலம் அழைத்து வரப்பட்டார்


மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர்; டெல்லியில் இருந்து ரெயில் மூலம் அழைத்து வரப்பட்டார்
x
தினத்தந்தி 9 Jun 2017 3:38 AM IST (Updated: 9 Jun 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இடைத்தரகர் சுகேஷ் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் அழைத்து வரப்பட்டு கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோவை,

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட புகாரில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் மீது கோவை கோர்ட்டில் மோசடி வழக்கு உள்ளது.

அந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

மோசடி வழக்கு

கோவையைச் சேர்ந்த ராஜவேல் என்பவர் சமையல் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் தன்னை கர்நாடக மாநில முதல்-மந்திரி அலுவலக அதிகாரி என்று கூறி போனில் பேசிய சுகேஷ் (35), அரசின் சமையல் உபகரணங்கள் டெண்டரை பெற்றுத்தருவதாக கூறினார். அதற்காக அவரிடம் 2 லட்சத்து 43 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்ட சுகேஷ், சொன்னபடி டெண்டரை வாங்கிக்கொடுக்கவில்லை.

இதுகுறித்து ராஜவேல் 31.1.2011-ல் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெங்களூரு பவானி நகரைச் சேர்ந்த சுகேஷ் என்கிற பிரகாஷ் என்கிற பாலாஜியை கைது செய்தனர். உடந்தையாக இருந்த அவரது தந்தை சந்திரசேகரும் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால் சுகேஷ் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரது தந்தை சந்திரசேகர் கோர்ட்டில் ஆஜராகி வந்தார். இதனையடுத்து மாஜிஸ்திரேட்டு கடந்த 9.1.2017 அன்று பிடிவாரண்டு பிறப்பித்தார்.

கோவை கோர்ட்டில் ஆஜர்

இதற்கிடையே இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேசை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோவை போலீசார் நடவடிக்கையில் இறங்கினார்கள். அதன்படி திகார் சிறை அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட தகவலை தெரிவித்தனர்.

அதன்பேரில் டெல்லி போலீசார் சுகேசை ரெயில் மூலம் நேற்று மதியம் 1.30 மணியளவில் கோவை அழைத்து வந்தனர். அவரை கோவை 2-ம் எண் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சுகேஷ் ஜாமீன் கேட்டார். இதை தொடர்ந்து சுகேசை வருகிற 22-ந்தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதனையடுத்து சுகேஷ் நேற்று மதியம் கோவையில் இருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் டெல்லிக்கு ரெயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்படுவார் என்று கோவை போலீசார் தெரிவித்தனர்.


Next Story