வைகாசி அனுஷ நட்சத்திரம் அன்றே வள்ளுவரின் பிறந்தநாளை கொண்டாட மாற்றம் கொண்டுவர வேண்டும்
வைகாசி அனுஷ நட்சத்திரம் அன்றே வள்ளுவரின் பிறந்தநாளை கொண்டாட தமிழக அரசு மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ் புத்தாண்டுதமிழ் புத்தாண்டு நாளை மாற்றி எழுதுவதற்கு இறைவனால் கூட முடியாது. எப்படி தி.மு.க. மாற்றி எழுதினார்கள், இந்த துரோகத்தை செய்தார்கள் இதை ஒரு காலமும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
சித்திரை 1–ந் தேதி தமிழர்களுடைய புத்தாண்டாக இருக்கும்போது, தி.மு.க. ஆட்சி, அதிகாரத்தில் இருந்த காரணத்தினால் தை 1–ந் தேதியை தமிழருடைய புத்தாண்டாக மாற்றினார்கள். இன்றைய அ.தி.மு.க. ஆட்சிக்கும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அறநிலையத் துறைக்கும் என்னுடைய வேண்டுகோள். தயவுசெய்து மாற்றுங்கள். சித்திரை 1–ந் தேதி தான் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் புத்தாண்டு.
களம் இறங்கி போராடுவோம்அதேபோல், வள்ளுவருடைய பிறந்த நாளை 1966–ம் ஆண்டு அன்றைய முதல்–அமைச்சர் பக்தவச்சலம், அன்றைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை வைத்துக்கொண்டு இதே மயிலாப்பூரில் வைகாசி அனுஷ நட்சத்திரம் அன்று வள்ளுவருடைய சிலையை திறந்துவைத்திருக்கிறார் என்றால், அதற்கு பின்பாக வரக்கூடிய முதல்–அமைச்சர் அதை மாற்றி, மாட்டுப் பொங்கல் அன்று தான் வள்ளுவருக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று சொல்வதும், அடுத்து வரக்கூடிய முதல்–அமைச்சர் அன்றைக்கு கொண்டாடக்கூடாது, இன்னொரு நாளைக்கு கொண்டாட வேண்டும் என்று மாற்றி சொல்வதும், இழுத்த இழுப்புக்கெல்லாம் போக தமிழன் தயாராக இல்லை.
எங்களுடைய மூதாதையர்கள் எங்களுக்கு தந்த வழிமுறைகள் இருக்கிறது. எனவே, ஆண்டுதோறும் வைகாசி அனுஷ நட்சத்திரம் அன்று வள்ளுவருடைய பிறந்தநாளை தமிழக அரசாங்கம் கொண்டாடுகின்ற வகையில், உடனடியாக மாற்றங்களை கொண்டுவந்தாக வேண்டும். அப்படி இல்லை என்று சொன்னால், தமிழ் சமுதாயம் வள்ளுவருக்கு செய்திருக்கின்ற துரோகத்தை எதிர்த்து களம் இறங்கி போராடும் காலம் வெகு விரைவில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.