தமிழிசையை போனில் மிரட்டியவர் மும்பை வாலிபர்; கைது செய்ய போலீசார் விரைந்தனர்


தமிழிசையை போனில் மிரட்டியவர் மும்பை வாலிபர்; கைது செய்ய போலீசார் விரைந்தனர்
x
தினத்தந்தி 11 Jun 2017 2:11 AM IST (Updated: 11 Jun 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மிரட்டல் விடுத்தவர் மும்பை வாலிபர் என்பது தெரியவந்தது.

சென்னை,

இதனையடுத்து அவரை கைது செய்ய போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.

தமிழிசைக்கு மிரட்டல்

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த 1–ந்தேதி இரவு 11.30 மணிக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செல்போனுக்கு மர்ம நபர் போன் செய்தார். எதிர் முனையில் பேசியவர், ‘‘ஏய் தமிழிசை, மோடி எங்கே இருக்கிறார் என்று சொல்?. அவரது செல்போன் நம்பர் கொடு?. அவரது முகவரி கொடு?. இப்படி எல்லாம் நீங்கள் செய்து கொண்டு இருந்தால் வெளியே செல்ல முடியாது’’ என்று மிரட்டும்படி பேசினார். உடனே போன் இணைப்பை தமிழிசை சவுந்தரராஜன் துண்டித்துவிட்டார்.

உடனே இதுகுறித்து, விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அடுத்த 2 நாளில் இதேபோல், மீண்டும் மிரட்டல் போன் அழைப்பு வந்தது. இதனையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 6–ந்தேதி அவரது வீட்டிற்கு வந்த பார்சலில், வெடிமருந்து, திரி மற்றும் கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தில், ‘‘மாட்டுக்கறி சம்பந்தமாக பேசுவதை நிறுத்திக்கொள். தொடர்ந்து பேசினால் உன்னை நடமாட விடமாட்டோம்’’ என்று எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்தும், விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

வெடிமருந்து பார்சல்

இந்த பரபரப்புக்கு இடையே நேற்று முன்தினம் தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு பார்சல் ஒன்று வந்தது. அந்த பார்சலிலும் வெடி மருந்து, திரி மற்றும் கடிதம் இருந்தது. இந்த பார்சலிலும், ஏற்கனவே டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வீட்டிற்கு அனுப்பப்பட்ட வெடி மருந்து பார்சலிலும் ஒரே முகவரியில் இருந்து அனுப்பப்பட்டு இருந்தது.

அதாவது, ‘‘வசூது, சிராஜ் மஹால், எண்.14, வேனல்ஸ் ரோடு, இம்பீரியல் காம்ப்ளக்ஸ், சென்னை – 600008’’ என்று முகவரி எழுதப்பட்டிருந்தது. மேலும், இந்த 2 பார்சல்களும் எழும்பூர் தபால் நிலையம் மூலமாக அனுப்பப்பட்டு இருந்தது. எனவே, வெடிமருந்து பார்சல் அனுப்பியவர் எழும்பூர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தபாலில் குறிப்பிடப்பட்டு இருந்த முகவரி போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மும்பை வாலிபர்

இதற்கிடையே, தமிழிசைக்கு மிரட்டல் வந்த 2 செல்போன் எண்களையும் தனிப்படை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். அந்த செல்போன் எண்களில் தொடர்பு கொண்டபோது, அதில் ஒரு செல்போன் எண் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. மற்றொரு எண்ணை தொடர்புகொண்டபோது, அந்த போனை வாலிபர் ஒருவர் எடுத்து தமிழிலேயே பேசினார்.

அவரிடம் பேசியபோது, தான் மும்பை தானே பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவித்தார். ஆனால், தான் போன் செய்து யாரையும் மிரட்டவில்லை என்று அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். இருந்தாலும், அந்த செல்போன் எண்ணில் இருந்து தான் மிரட்டல் வந்ததால், அவரை போலீசார் விடுவதாக இல்லை.

இதுகுறித்து, விசாரணை நடத்தவும், அவரை கைது செய்யவும் தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர். இந்த வாலிபரே போன் செய்து மிரட்டினாரா?, அல்லது அவரது போனை வேறு யாராவது எடுத்து பேசினார்களா? என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.


Next Story