டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வை சொந்தம் கொண்டாடுவது ஏற்புடையது அல்ல; ஜெ.தீபா கடும் தாக்கு


டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வை சொந்தம் கொண்டாடுவது ஏற்புடையது அல்ல; ஜெ.தீபா கடும் தாக்கு
x
தினத்தந்தி 11 Jun 2017 2:15 AM IST (Updated: 11 Jun 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வை சொந்தம் கொண்டாடுவது எள்ளளவும் ஏற்புடையது அல்ல என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை,

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

துரோகி என இனம் கண்டு...

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா கட்டிக்காத்திட்ட அ.தி.மு.க. இன்று துரோக கும்பலின் பிடியில் சிக்கி சீர்கெட்டு வரும் நிலை மிக மிக வேதனைக்குரியது. சசிகலாவின் வழிகாட்டுதலில் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வை நாங்களே இயக்குவோம் என்பது எம்.எல்.ஏ.க்களில் சிலரை தன் வசமாக்கியதின் மூலம் கட்சியும், ஆட்சியும் எங்கள் வசமே என்று வெட்டி வீராப்பு பேசுவது பெரும் நகைச்சுவைக்குறியதும், கேலிக்குறியதுமாகும்.

தினகரன் மாதிரி ஆட்கள் அ.தி.மு.க.வை சொந்தம் கொண்டாடுவது எள்ளளவும் ஏற்புடையது அல்ல. கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா தினகரனை துரோகி என்று இனம் கண்டு பகிரங்கமாக கண்டித்து அடிப்படை உறுப்பினராகக்கூட இருக்க தகுதியற்ற நபராக நீக்கிவைத்தார்.

கோபம்

அன்று முதல் வெளித்தெரியா வாழ்வு கண்ட நபரே இந்த தினகரன். துரோக கும்பலால் தான் ஜெயலலிதாவுக்கு நேர்ந்த மரணத்தின் மர்மம் என்பது ஒட்டு மொத்த தமிழக மக்களால் முன் வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டாகும். இந்த குற்றசாட்டுகளுக்கு எல்லாம் தீர்வு வராத நிலையில் அவர்கள் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பது பொதுமக்களுக்கும், தொண்டர்களும் பொறுத்துக்கொள்ள முடியாத கோபத்தையும், ஆத்திரத்தையும் மூட்டியுள்ளது.

உண்மை வாரிசு

வத்தலகுண்டு ஆறுமுகம், பூலாவாரி சுகுமாறன் சிந்திய இரத்தத்தால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அ.தி.மு.க.வுக்கு சம்பந்தமே இல்லாத சசிகலா, தினகரன் போன்றோரால் ஒருபோதும் வீழ்த்திட முடியாது. ஜெயலலிதாவின் உண்மை வாரிசான என்னால் தான் இக்கழகம் கட்டிக்காக்கப்படும். எனது அத்தை எனக்கு ஊட்டி வளர்த்திட்ட தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டு இக்கழகத்தை மீட்டு கட்டிகாப்பதே எனது லட்சியம். உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் லட்சியமும் அதுவே. லட்சியம் நிறைவேரும் அந்நாளில் துரோக கும்பலின் கொட்டம் அடக்கப்பட்டிருக்கும் வீழ்த்தப்பட்டிருக்கும் என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story