“துரோகிகளிடம் நட்பு வைத்துக்கொள்ளக் கூடாது”; குட்டிக்கதை சொன்ன முதல்-அமைச்சர்

துரோகிகளிடம் நட்பு வைத்துகொள்ளக் கூடாது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குட்டி கதை சொன்னார்.
ஈரோடு,
அவர் கூறியதாவது:-
என் கல்லூரி நாட்களில் பல நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள். அவர்களெல்லாம் உண்மையானவர்களாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், உள்ளன்பு மிக்கவர்களாகவும் இருந்தார்கள். அப்படிப்பட்ட நட்பும் நம்பிக்கையும் தான் எதிர்காலத்தில் எனது பொது வாழ்க்கைக்கு பலமாக இருந்தது. இதை கூறும்போது, எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஒப்பந்தம்
ஒருவன் தன் ஊரை அடைய காட்டு வழியே நடந்து கொண்டிருந்தான். இருட்டிவிட்டது. இருட்டில் நடந்தால் மிருகங்கள் தாக்கிவிடும் என்று நினைத்து அங்குள்ள ஒரு மரத்தடியில் தனியே உட்கார்ந்து இருந்தான். அப்போது அவனைப்போலவே இன்னொருவனும் தனியாக வந்தான்.
2 பேரும் எதிர்பாராமல் சந்தித்தனர். இருவரும் நண்பர்கள் ஆனார்கள். தாங்கள் காட்டினை கடந்து செல்ல வேண்டிய விவரத்தை பகிர்ந்து கொண்டனர். அப்போது அவர்கள் 2 பேரும் சேர்ந்தே காட்டை கடந்து விடலாம் என்று பேசிக்கொண்டனர். மேலும் காட்டினை கடந்து செல்லும்போது வழியில் எந்த ஆபத்து வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். பின்னர் 2 பேரும் காட்டு வழியே நடந்து சென்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் சென்ற வழியில் கரடி ஒன்று வந்தது. அதைப் பார்த்ததும் ஒருவன் தங்களுக்குள் போடப்பட்ட ஒப்பந்தத்தை மறந்து ஓடிப்போய் ஒரு மரத்தில் ஏறிக்கொண்டு தப்பித்துக்கொண்டான்.
நம்பிக்கை துரோகி
இன்னொருவனுக்கு மரம் ஏறத்தெரியாது. எனவே தரையில் படுத்து மூச்சை தம் கட்டிக்கொண்டு கிடந்தான். கரடி அருகில் வந்தது. அது கீழே கிடந்தவனை பார்த்தது. அவனிடம் சென்று முகர்ந்து பார்த்தது. அவன் இறந்துவிட்டான் என்று நினைத்த கரடி திரும்பிச்சென்றது. இதை மரத்தில் இருந்து பார்த்தவன், கீழே வந்து, தரையில் படுத்து கிடந்தவனிடம், “கரடி உன் காதில் ஏதோ கூறியதே, அது என்ன?” என்று கேட்டான்.
அதற்கு இவன், ‘ஒப்பந்தத்தை மீறிய உன்னை மாதிரி நம்பிக்கை துரோகிகளிடம் இனிமேல் நட்பு வைத்துக்கொள்ளக்கூடாது!’ என்று கரடி சொன்னது என்று பதில் கூறினான்.
யார்?
நெருக்கடி வருகிறபோது உதவிக்கரம் நீட்டுகிறவர்கள்தான் உண்மையான நண்பர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். என் நண்பர்களை நான் முழுமையாக நம்புகிறேன். அந்த நம்பிக்கைதான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. என்னாலும் என் நண்பர்கள் உயர்வார்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறினார்.
இந்த குட்டிக்கதையை கேட்டு விழாவில் கலந்துகொண்ட அனைவரும் கைத்தட்டி ரசித்தனர். மேலும், நம்பிக்கை துரோகம் செய்த நண்பன் யார்? முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமா? டி.டி.வி.தினகரனா? கரடி யார்? என்றும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.