வெப்ப சலனம்: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், வறட்சி மற்றும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.
சென்னை,
இதனை போக்குவதற்கு தென்மேற்கு பருவமழை கொஞ்சமாவது கைகொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்தநிலையில் கேரளாவில் கடந்த மாதம் 30–ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் வால்பாறையில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பட்டுக்கோட்டையில் 3 செ.மீ, நீலகிரியில் 2 செ.மீ. என்ற அளவில் மழை அளவு பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.