மன்னார்குடியில் பரபரப்பு; டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டம் நடத்த தடை


மன்னார்குடியில் பரபரப்பு; டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டம் நடத்த தடை
x
தினத்தந்தி 12 Jun 2017 2:27 AM IST (Updated: 12 Jun 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

மன்னார்குடி,

அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன்பாக டி.டி.வி.தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்தார். இதையடுத்து தீவிரமாக கட்சி பணியாற்றி வந்த அவரை, இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில் டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் பலர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தினகரன் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்த பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தடை

இதற்காக மன்னார்குடி பந்தலடியில் மேடை அமைக்கப்பட்டது. கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்களான நாஞ்சில்சம்பத், கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேச இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், போலீசார் பந்தலடி பகுதிக்கு வந்து பொதுக்கூட்டத்துக்கு அனுமதி இல்லை என கூறி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்தனர். மேலும் மேடை, பேனர்கள், மின் விளக்குகளை அப்புறப்படுத்தும்படி பொதுக் கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

புகழேந்தி பேட்டி

இந்த நிலையில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மன்னார்குடி வந்த கர்நாடக மாநில அ.தி.முக. செயலாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

சசிகலாவை பற்றி வதந்தி பரப்பி வருகிறார்கள். அதற்கு விளக்கம் அளிப்பதற்காக இந்த பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தோம். சசிகலா தான் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர். பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்காதது எங்களுக்கு கிடைத்த வெற்றி. தினகரனின் வளர்ச்சியை கண்டு பயந்து தடை விதித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க.வை வழிநடத்தும் தகுதி, திறமை டி.டி.வி.தினகரனுக்கு மட்டுமே உண்டு. நீதிமன்றத்தை அணுகி அனுமதி வாங்கி, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்களை திரட்டி மன்னார்குடியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துவோம். தொண்டர்கள் மத்தியில் தினகரனுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story