பேச்சுவார்த்தை என்று நாடகம் ஆடுகிறார்கள்: தொண்டர்கள் எங்கள் பக்கம் என்பதை விரைவில் நிரூபிப்போம்


பேச்சுவார்த்தை என்று நாடகம் ஆடுகிறார்கள்:  தொண்டர்கள் எங்கள் பக்கம் என்பதை விரைவில் நிரூபிப்போம்
x
தினத்தந்தி 12 Jun 2017 10:45 PM GMT (Updated: 12 Jun 2017 1:30 PM GMT)

பேச்சுவார்த்தை என்று நாடகம் ஆடுகிறார்கள் என்றும், அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் என்பதை விரைவில் நிரூபிப்போம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை,

முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?.

பதில்:– பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டதற்கு பின் நாடகம் ஆடுகின்ற சூழ்நிலையை அவர்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்களும் சேர்ந்து நாடகம் ஆட தயாராக இல்லை.

கேள்வி:– அடுத்தகட்டமாக உங்களின் நடவடிக்கை எந்த மாதிரி இருக்கும்?.

பதில்:– புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் மிகப்பெரிய இயக்கமாக வளர்த்து தந்திருக்கின்ற அ.தி.மு.க.வின் தொண்டர்கள் முழுவதுமாக எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பது கூடிய விரைவில் நிரூபணம் ஆகும்.

கேள்வி:– ஜனாதிபதி தேர்தலில் உங்களுடைய ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்?.

பதில்:– தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த கட்சிகள் சார்பாக யாரை வேட்பாளராக அறிவிக்கின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்த்து, எங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை தலைமைக்கழகத்தினுடைய நிர்வாகிகள் கலந்துபேசி, நல்ல முடிவை அறிவிப்போம்.

கேள்வி:– சிறையில் இருந்து டி.டி.வி.தினகரன் வெளியே வந்ததால் தான் நீங்கள் இதுபோன்ற ஒரு முடிவை எடுத்ததாக குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?.

பதில்:– அவர்கள் எங்களிடம், ஆக்கப்பூர்வமான எந்தவொரு யோசனைகளும், நடவடிக்கைகளும், நம்பிக்கை தகுந்த காரணங்களோடு கருத்து பரிமாற்றம் எதுவும் செய்யவில்லை. இதை நாங்கள் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து, தமிழக மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும் என்ற நிலையில், ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்களின் கருத்தாகவே அது இருக்கிறது என்பதை உணர்ந்த காரணத்தால், நாங்கள் இந்த முடிவை அறிவித்தோம். எந்தவித நிர்ப்பந்தமும் இல்லை.

கேள்வி:– அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் பெற உங்களின் நடவடிக்கை என்ன?.

பதில்:– முறைப்படியான கழக சட்ட விதிப்படி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியிடம் காலியாக இருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில், அடுத்த நிலையில் இருக்கக்கூடிய கழகத்தினுடைய அவைத் தலைவர், பொருளாளர் ஆகியோர் தான் கழகத்தை வழிநடத்தி செல்ல வேண்டும் என்று சட்ட விதி இருக்கிறது. அந்தப் பிரச்சினை தற்போது இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணை முடிகின்ற நிலையில் இருக்கிறது. விசாரணையின் தீர்ப்பு கூடிய விரைவில் வரும். நல்ல முடிவை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

கேள்வி:– நாளை மறுதினம் சட்டசபை கூட இருக்கிறது. உங்கள் அணி எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு எப்படி இருக்கும்?.

பதில்:– 14–ந்தேதி காலை 9 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள், மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமை, செய்யத்தவறிய கடமை என்னவெல்லாம் என்பதை சட்டமன்றத்தில் நாங்கள் முழுமையாக எடுத்து கூறுவோம்.

கேள்வி:– போயஸ் கார்டன் இல்லத்திற்குள் நேற்று ஜெ.தீபா நுழைந்தது குறித்து உங்கள் கருத்து என்ன?.

பதில்:– எங்களை பொறுத்தவரையில், ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை கோவிலாக கருதுகிறோம். அதை நினைவு இல்லமாக ஆக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. மக்களின் விருப்பமும் அதுதான். சட்ட விதிமுறைகள் என்ன கூறுகிறதோ, அதன்படி அவரது சொத்துகள் யாருக்கு சேர வேண்டுமோ அவர்களுக்கு சேரும்.

கேள்வி:– போயஸ் கார்டனில் செய்தியாளர் தாக்கப்பட்டது குறித்து?.

பதில்:– செய்தியாளர்கள் எந்த சூழ்நிலையில் தாக்கப்பட்டாலும் கண்டிக்கத்தக்கது.  இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பேட்டியின்போது, கட்சியின் நிர்வாகிகள் இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.பாண்டியராஜன், பொன்னையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story