நீதிபதி கர்ணனுக்கு விதித்த தண்டனையை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி


நீதிபதி கர்ணனுக்கு விதித்த தண்டனையை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 13 Jun 2017 7:30 PM GMT (Updated: 13 Jun 2017 6:07 PM GMT)

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு விதித்த தண்டனையை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

சென்னை,

இந்திய வக்கீல்கள் சங்கம், ஆந்திரா–தெலுங்கானா மாநில ஆதிதிராவிடர், பழங்குடியினர் வக்கீல்கள் சங்கம், தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கர் வக்கீல்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:–

விசாரணை இல்லாமல் தண்டனை

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீதான குற்றச்சாட்டை சட்ட நடைமுறைப்படி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் விசாரணைக்கு பின்பே தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் சட்டம். நீதிபதி கர்ணன் விவகாரத்தில் விசாரணையே நடத்தாமல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாகும். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி இதுபோன்று உத்தரவு பிறப்பித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இந்த தீர்ப்பு தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.

சட்டம் மீறல்

இந்த தீர்ப்பை சாதி ரீதியான பாகுபாடு என்ற அடிப்படையிலேயே பார்க்கிறோம். மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு மட்டுமே 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்படுத்தப்படும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதாகவே கருதுகிறோம்.

நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது மனித உரிமை மீறல் ஆகும். ஒருவரது மனநலனை பரிசோதிக்க உத்தரவு பிறப்பிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. நீதித்துறையில் இருந்து வரும் ஊழல், சாதி பாகுபாடு குறித்து வெளிப்படையாக புகார் தெரிவித்த ஒரே காரணத்துக்காக நீதிபதி கர்ணன் தண்டிக்கப்பட்டுள்ளார்.

திரும்ப பெற வேண்டும்

இதையெல்லாம் பார்க்கும்போது ஜனநாயகம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது என்பதை தான் காட்டுகிறது. சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாகவே நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறி மனு அளித்தனர். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீதிபதி கர்ணனின் கருத்துகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி கர்ணனை தண்டிக்கும்போது அவர் அனைத்து உண்மைகளையும் வெளியே சொல்லி விடுவார் என்று கருதியே சுப்ரீம் கோர்ட்டு அதுபோன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது ஊடக சுதந்திரத்துக்கும், தனி மனித சுதந்திரத்துக்கும் எதிரானதாகும். நீதிபதி கர்ணனை கைதுசெய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். அவர் மீதான தண்டனையை உடனடியாக ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் இந்திய அளவில் விரைவில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்

இதன்பின்பு பத்திரிகையாளர் மன்றத்தை விட்டு வெளியே வந்த அவர், ‘இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கேள்விகளுடன் நீட் தேர்வை திரும்ப நடத்த வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவர்களை சேர்த்துக்கொள்ள தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். சசிகலா அணியை ஆதரிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் தங்க காசுகள் வழங்கப்பட்டதாக கூறுவது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். பணம் வழங்கப்பட்டது உண்மை தான் என்று நிரூபிக்கப்பட்டால் இந்த கோரிக்கை நியாயமானது தான்’ என்றார்.

Next Story