காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சாமி தரிசனம்


காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சாமி தரிசனம்
x
தினத்தந்தி 14 Jun 2017 5:30 AM IST (Updated: 14 Jun 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் அம்மனுக்கு தங்க குடத்தில் புஷ்பாஞ்சலி செய்தார்.

காஞ்சீபுரம்,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லியில் இருந்து தனி ராணுவ விமானம் மூலம் அரக்கோணம் ராஜாளி ராணுவ தளத்துக்கு நேற்று பிற்பகல் வந்தார். அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் சன்னதி தெருவில் உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்துக்கு சென்றார்.

பின்னர் அவர் பட்டு வேட்டி, பட்டு துண்டு அணிந்து கொண்டு காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்தார். கோவில் நுழைவு வாயிலில் இருந்து சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது.

ஜனாதிபதியை காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பிறகு ஜனாதிபதி பேட்டரி கார் மூலம் காமாட்சியம்மன் கோவில் சன்னதி சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

அப்போது மேற்கு வங்காள வழக்கப்படி தங்க குடத்தில் அம்மனுக்கு ஜனாதிபதி தன் கைகளால் புஷ்பாஞ்சலி செய்தார்.

சங்கர மடத்தில்...


அதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்பு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 308 அம்மன் நாமாவளி அர்ச்சனை செய்தார். பிறகு ஜனாதிபதிக்கு அர்ச்சகர்கள் கோவில் பிரசாதம் வழங்கினர். அங்கிருந்து வெளியே வந்த ஜனாதிபதி கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சன்னதியில் அவரது தங்க பாதத்துக்கு அர்ச்சனை செய்தார். பின்னர் பேட்டரி கார் மூலம் பிரகாரத்தை சுற்றி வந்தார்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி ¾ அடி உயரம் உள்ள காமாட்சியம்மன் விக்கிரகத்தை வழங்கினார். பின்னர் அங்கிருந்து காஞ்சி சங்கரமடத்துக்கு ஜனாதிபதி சென்றார்.

மடத்தின் நுழைவு வாயிலில் ஜனாதிபதிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மடத்தின் உள்ளே பேட்டரி கார் மூலம் சென்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அங்குள்ள சந்திரமவுலீஸ்வரர் சன்னதிக்கு சென்று வணங்கினார்.

ஆசி பெற்றார்


பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரிடம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து முக்தியடைந்த காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்துக்கு சென்று அவருடைய தங்க பாதத்துக்கு மலர்களால் பூஜை செய்தார். அப்போது ஏகாம்பரநாதர் கோவில் பிரசாதத்தை கோவில் செயல் அலுவலர் முருகேசன் ஜனாதிபதியிடம் வழங்கினார். சுமார் 1 மணி நேரம் காஞ்சி சங்கர மடத்தில் இருந்த ஜனாதிபதி பின்னர் கார் மூலம் அரக்கோணம் சென்றார்.

முன்னதாக காஞ்சீபுரம் வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை கலெக்டர் பொன்னையா, தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர், மாவட்ட வருவாய் துறை அதிகாரி சவுரிராஜன், காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான விஜயன் ஆகியோர் வரவேற்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடு

காஞ்சீபுரத்துக்கு ஜனாதிபதி வருகையையொட்டி சுமார் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜனாதிபதி வரும் பாதையில் நேற்று காலை முதல் போக்குவரத்து மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

Next Story