எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் திருப்தி இல்லை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் திருப்தி இல்லை என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு ஆங்கில நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதுதான் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் காட்டும் நன்றியாகும். சசிகலா குடும்பத்தினர் ஒதுங்கியுள்ள நிலையில் அவர்கள் பேச்சு நடத்த முன்வந்துள்ளனர்.
அ.தி.மு.க.வை சசிகலா குடும்பத்தினர் கட்டுப்படுத்தக் கூடாது. தனிப்பட்ட ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ கட்சியை கட்டுப்படுத்தக் கூடாது. இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கான கட்சி.
தற்போது சரவணனின் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது அவர் தப்பி வந்து இங்கு சேர்ந்தார். தொலைக்காட்சியில் ஒளி பரப்பான அவரது உரையாடல் பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.
எந்த ஒரு அரசியல் கட்சி எம்.பி.யோ அல்லது எம்.எல்.ஏ.வோ அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடகூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. பணபேரத்தில் யார் ஈடுபட்டாலும் குற்றம் தான். எங்கள் அணியில் உள்ள யாரும் பண பேரத்தில் ஈடுபடவில்லை.
தமிழக அரசியலில் தற்போது எத்தனையோ நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. சில நாடகங்கள் தத்துவமாக உள்ளன. சில நாடகங்கள் அனுபவத்தையும் அறிவுரையையும் தருகின்றன.
சில நாடகங்கள் ஆன்மீகப் பாதைக்கு அழைத்து செல்வதாக இருக்கின்றன. ஆனால் தினகரன் ஆதரவாளர்கள் நடத்தும் நாடகங்களில் எனக்கு நம்பிக்கை வரவில்லை.
அதுபோல எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியிலும் திருப்தி இல்லை.மக்கள் மத்தியில் அத்தகைய மனநிலைதான் உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது பற்றி நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தேசியக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்ததும் நாங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசித்து உரிய முடிவு எடுப்போம். இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
Related Tags :
Next Story