நடிகர் விஜய் கருத்துக்கு வரவேற்பு: விவசாயிகளுக்கு திரையுலகினர் ஆதரவு தரவேண்டும் அய்யாக்கண்ணு பேட்டி


நடிகர் விஜய் கருத்துக்கு வரவேற்பு: விவசாயிகளுக்கு திரையுலகினர் ஆதரவு தரவேண்டும் அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 14 Jun 2017 7:30 PM GMT (Updated: 14 Jun 2017 6:41 PM GMT)

நடிகர் விஜய் கருத்துக்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும், அதேபோல் விவசாயிகளுக்கு திரையுலகினர் ஆதரவு தரவேண்டும் என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

சென்னை,

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சிலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

டெல்லிக்கு செல்வதற்காக திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று அவர்கள் வந்தனர். அப்போது அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:–

நம்புகிறோம்

தமிழக முதல்–அமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூறுகிறார். ஆனால் செய்வதில்லை. நாங்கள் போராடும் இடத்தில் இருந்து எங்களை அப்புறப்படுத்தவே அரசு நினைக்கிறது. செய்ய வேண்டும் என்கிற உறுதிப்பாடு முதல்–அமைச்சரிடம் இல்லை.

எங்களுடைய கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். எங்களுக்கு தெரிந்தது போராட்டம் ஒன்று தான். பிரதமரும் எங்களை பார்க்கமாட்டேன் என்கிறார். தேர்தலுக்கு பிறகு எங்களை அடிமையாகவே பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதரவு தரவேண்டும்

அப்போது, ‘நாடு வல்லரசு ஆவதை விட விவசாயிகளுக்கு நல்ல அரசாக இருக்க வேண்டும்’ என்று நடிகர் விஜய் குரல் கொடுத்து இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த அய்யாக்கண்ணு, ‘நடிகர் விஜய் கூறியது உண்மை தான். அதை வரவேற்கிறோம். அதேபோல் திரையுலகில் இருக்கும் அனைவரும் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும். மேலும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்.

Next Story