நீட் தேர்வு அரசின் மசோதாவை மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை விஜயபாஸ்கர் குற்றசாட்டு


நீட் தேர்வு அரசின் மசோதாவை மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை விஜயபாஸ்கர் குற்றசாட்டு
x
தினத்தந்தி 15 Jun 2017 7:48 AM GMT (Updated: 15 Jun 2017 7:48 AM GMT)

நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசு மீது தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை

தமிழக சட்டபேரவையில் இன்று பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது விவாதத்தில் தி.மு.க உறுப்பினர் தங்கம் தென்னரசு, நீட் தேர்வில் அரசின் கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பினார்.  அதற்குப் பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயலலிதாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.நீட் தேர்வு விவகாரத்தில் 26ஆம் தேதிக்கு முன்பாக அரசின் முடிவு அறிவிக்கப்படும். நீட்  தேர்வை ரத்துசெய்யக்கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். கிராமப்புற மாணவர்களைப் பாதுகாக்க உள்ஒதுக்கீடு கொண்டுவர ஆலோசிக்கிறோம். இது தொடர்பாக, சட்டவல்லுநர்களிடம் ஆலோசனைசெய்துவருகிறோம்.

அப்போது, திமுக எம்எல்ஏ துரைமுருகன் குறுக்கிட்டு, நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஏன் காலதாமதம் செய்கிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு பற்றி தமிழக அரசின் மசோதாவை ஜனாதிபதிக்கு மத்திய அரசு அனுப்பவில்லை என்று திடீர் குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வு விவகாரம் பூதாகரமாக மாறியதற்கு காரணமே முந்திய திமுக அரசுதான் என்றும், திமுக கூட்டணியில் இருந்தபோது நீட் அறிவிப்பை அப்போதைய காங்கிரஸ் அரசு வெளியிட்டது என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு போராடினால் அதற்கு திமுக ஒத்துழைக்க தயார். நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு ஏன் போகவில்லை? திமுக முயற்சியால்தான் நீட் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது என்றும் அமைச்சர் பொன்முடி பேசினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வில் தும்பை விட்டது திமுக அரசு; தற்போது வாலை பிடித்துக்கொண்டிருப்பது அதிமுக என்று கூறினார்.

Next Story