எடப்பாடி பழனிசாமியுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்திப்பு


எடப்பாடி பழனிசாமியுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 15 Jun 2017 6:00 PM IST (Updated: 15 Jun 2017 6:00 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமியை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.


சென்னை

அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டைஇலை சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டுமென்றால் சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியினர் தொடர்ந்து கூறி வந்தனர். இதனை ஏற்று இருவரையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.இதை ஏற்று தினகரனும் ஒதுங்கி இருப்பதாக கூறினார்.

தினகரன் 34 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் கடந்த 3-ந்தேதி திகார் சிறையில் இருந்த விடுதலை யானார். ஜெயிலில் இருந்து வெளிவந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தினகரன், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளரான சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது. என்னை யாரும் ஒதுக்கி வைக்க முடியாது என்று கூறினார். கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டப் போவதாகவும் கூறினார்.

கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்ததை அமைச்சர்கள் சிலர் ஏற்கவில்லை. அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை கட்சியினர் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களோ அணி திரண்டு சென்று தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் தினகரனுக்கு எதிராக பேசிய அமைச்சர்கள் அடங்கிப் போனார்கள்.

டிடிவி தினகரனுக்கு 34 எம்.எல்.ஏக்கள் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளனர். தினகரன் ஆதரவு எம்.பி.க் களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் சசிகலா அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

பெங்களுரு சிறையிலுள்ள சசிகலாவை, டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வரின் அறையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இதில், தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்கத்தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, 'ஆட்சியை நீங்கள் வழிநடத்துங்கள். கட்சியை தினகரன் வழிநடத்துவார்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story