சென்னை பல்கலைக்கழகத்தில் இல.கணேசன் எம்.பி.க்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம்


சென்னை பல்கலைக்கழகத்தில் இல.கணேசன் எம்.பி.க்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம்
x
தினத்தந்தி 16 Jun 2017 12:15 AM IST (Updated: 15 Jun 2017 10:46 PM IST)
t-max-icont-min-icon

சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் இல.கணேசன் எம்.பி.க்கு எதிராக சிலர் கோ‌ஷம் போட்டனர்.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகம், சுவாமி விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையம் சார்பில் ‘சுவாமி விவேகானந்தரின் உயர் கல்வி கொள்கையும் அதன் நோக்கமும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் நேற்று நடந்தது. சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் தலைமை தாங்கினார்.

சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை தலைவர் நல்லூர் சா.சரவணன் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எஸ்.கருணாநிதி, பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு உள்பட பலர் பேசினர்.

கோ‌ஷம்

பொற்றாமரை தலைவரும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான இல.கணேசன் பேச எழுந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் இல.கணேசன் பேச எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் போட்டனர். உடனே அவர்களை நீங்கள் மாணவர்களா? என்று சில ஆசிரியர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் சரியான பதிலை அளிக்கவில்லை.

கோ‌ஷம் போட்ட சிலர், மாட்டுக்கறி சாப்பிடுவது எங்கள் உரிமை, இதனை தடுக்கக்கூடாது என்றும், பா.ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் எதிர்த்து கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. உடனடியாக அவர்களை பல்கலைக்கழக ஊழியர்கள் கூட்ட அறையில் இருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் அவர்கள் பல்கலைக்கழகம் முன்பு கோரிக்கை அட்டைகளை ஏந்தி கோ‌ஷம் போட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர்.

சலசலப்பு ஏற்பட்ட நிலையில் இல.கணேசன் எம்.பி. விழாவில் பேசி விட்டு அங்கிருந்து சென்றார்.

Next Story