தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு கோர்ட்டில் உள்ள விஷயம் குறித்து விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் அறிவிப்பு


தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு கோர்ட்டில் உள்ள விஷயம் குறித்து விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2017 11:30 PM GMT (Updated: 15 Jun 2017 7:47 PM GMT)

எம்.எல்.ஏ.க்களுக்கு பணம், நகை கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பில் ஈடுபட்டன.

சென்னை

எம்.எல்.ஏ.க்களுக்கு பணம், நகை கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பில் ஈடுபட்டன. கோர்ட்டில் உள்ள விஷயம் குறித்து விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

தீர்ப்பை மாற்ற கோஷம்

தமிழக சட்டசபை நேற்று காலை வழக்கம் போல் காலை 10 மணிக்கு கூடியது. முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. 11.20 மணியளவில் கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து தன்னை பேச அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்:-நேற்று (நேற்றுமுன்தினம்) இந்த அவையில் எழுப்பப்பட்ட பிரச்சினையையொட்டி சில கருத்துக்களை கூற விரும்புகிறேன். கடந்த 3 நாட்களாக ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான....

சபாநாயகர்:-நான் ஏற்கனவே இதற்கு தீர்ப்பு கூறி விட்டேன். இதை பற்றி பேச வேண்டாம். நீங்கள் வேறு விஷயத்தை பற்றி பேசுங்கள். அனுமதி வழங்குகிறேன்.

அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் தீர்ப்பை மாற்றுங்கள், தீர்ப்பை மாற்றுங்கள் என்று கோஷமிட்டனர்.

சபாநாயகர்:-எதிர்க்கட்சி தலைவர் என்னை நோக்கி பேசிக்கொண்டு இருக்கிறார். நான் அவரிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன். குறுக்கே யாரும் பேச வேண்டாம்.

மு.க.ஸ்டாலின்:-கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கு பற்றி கருத்து கூறக்கூடாது என்று தான் சட்டமன்ற விதி கூறுகிறது. நாங்கள் தாக்கல் செய்த வழக்கு 16-ந்தேதி தான் கோர்ட்டுக்கு வரப்போகிறது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா? எடுத்துக் கொள்ளப்படாதா? என்பது அப்போதுதான் தெரியவரும். எனவே இந்த பிரச்சினை குறித்து பேச அனுமதி வழங்க வேண்டும்.

வெளிநடப்பு

சபாநாயகர்:-நீங்கள் என்ன பேச வருகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். அதை பற்றி பேச வேண்டாம்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பிறகு சபாநாயகர் பேசினார்.

பத்திரிகையை ஆதாரமாக கொண்டு பேசக்கூடாது

சபாநாயகர்:-எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் நேற்றைக்கே (நேற்று முன்தினம்) இந்தப்பிரச்சினையை எழுப்பினார்கள். நானும் மிகவும் பொறுமை காத்தேன். தி.மு.க. உறுப்பினர்களை அமைதி காக்க கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நான் போராடினேன். எதிர்கட்சிகள் தற்போது எழுப்பும் பிரச்சினை சம்பந்தமாக ஒருசிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவரும் இங்கே பேசியபோது பத்திரிகையில் வந்துள்ளது என்று சொன்னார்கள். பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்துப் பேசினார்கள்.

பத்திரிகையை ஆதாரமாக கொண்டு பேசக்கூடாது என்று 1972-ம் ஆண்டு நான்காவது சட்டமன்றப்பேரவையில், அப்போதைய சபாநாயகர் தீர்ப்பளித்துள்ளார். எட்டாவது சட்டமன்றப் பேரவையில் அப்போதைய 1985-ம் ஆண்டுகளில் பத்திரிகையை மேற்கோள் காட்டி பேசக் கூடாது என அன்றைய சபாநாயகர் தீர்ப்பளித்துள்ளார்.

புகைப்படம்

ஏன் பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்து இங்கே விவாதிக்கக் கூடாது என்பதற்கு ஓர் உதாரணத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்து 27-3-1997 அன்று இதே சட்டமன்றப் பேரவையில் விவாதம் நடைபெற்றது. அன்றைக்கு உறுப்பினராக இருந்த சி.ஞானசேகரன் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார். அன்றைக்கு அவர் பேசியது, ‘பத்திரிகைகளில் தமிழ் மாநிலக் காங்கிரசைச் சார்ந்திருக்கிற எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஒரு கலர் போட்டோவை நாங்கள் பார்த்தோம்’ என்றும் சொல்லி, ஒரு சில கருத்துக்களைச் சொல்கிறார்.

பின்னர் பேசிய உறுப்பினர்கள் கே.சுப்பராயன், குமாரதாஸ், சோ.பாலகிருஷ்ணன், ஆர்.சொக்கர் ஆகியோரும் உறுப்பினர் சி.ஞானசேகரன் கருத்துக்கு வலு சேர்க்கின்ற விதத்திலேயே தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். திருநாவுக்கரசு பத்திரிகையில் வந்த புகைப்படம் உண்மையல்ல என்று பேசுகிறார்.

பதிலுரை வழங்கிய அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி, ஏடுகளில் வந்துள்ள இந்தப் புகைப்படம் ஒரு புதிய திருப்பமாக அமைந்துள்ளது, இதுகுறித்து மாநில அரசு விசாரித்து, மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும் என்று சொல்லியுள்ளார்.

ஆதாரம் காட்டி விட்டு...

அதன் பின்னர் பேசிய ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.வெங்கடசாமி, புகைப்படத்தில் உள்ளவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் என்று தெரிவித்ததால், அவருக்கு முன்னால் பேசிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தும் உண்மைக்கு மாறானதாகிறது.

எதற்காக ஏற்கெனவே நடைபெற்ற ஒரு நிகழ்வைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், பத்திரிகையிலே செய்தி வந்தாலும், நிரூபிக்கத்தக்க ஆதாரம் இல்லாத வரையில் அதுசம்பந்தமாக அவையில் பேசப்பட்டு, அது பதிவு செய்யப்பட்டால் அது சரியாக இருக்காது என்பதால் சொல்கிறேன்.

அன்பழகன்

அன்றைக்கு பேரவை முன்னவராக இருந்த க.அன்பழகன் 2010-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி இங்கே உரையாற்றுகையில் சொல்கிறார், ஒரு செய்தி தன்னுடைய காதுக்கு வந்தால்கூட, அது ஒரு குற்றச்சாட்டாக வடிவம் எடுக்கிறதென்று சொன்னால், அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு அறிந்த பின்னர் தான் இந்த அவையிலே சொல்ல வேண்டும். வெளியிலே எத்தனையோ செய்திகள் வரலாம். அப்படி வருகிற செய்திகளையெல்லாம் இங்கே பதிவு செய்தவற்கு இது பதிவுத்துறை அலுவலகம் அல்ல. இன்னும் சொல்லப்போனால், இந்த அவையிலே உள்ள யாரையும் அவமதிக்கிற செய்தியை வெளியிலே யார் சொன்னாலும் அதை மறுபடியும் இங்கே வந்து சொல்வதற்கு தேவையான அனுமதி இந்த அவையிலே கிடையாது. அப்படி அவமதிக்கக்கூடிய, குறை சொல்லக்கூடிய ஒரு குற்றச்சாட்டு இருக்குமானால், முன்கூட்டி அதை அவைத் தலைவரிடத்திலே தெரிவித்து, அதற்கான ஆதாரம் காட்டிவிட்டு அதற்குப் பிறகுதான் இந்த அவையிலே சொல்ல வேண்டும். அப்படியல்லாமல் விதியை மீறிச் சொல்கிற செய்தி எதுவாக இருந்தாலும் இந்த அவையிலே பதிவு செய்யப்படக் கூடாது என்று சொல்லியுள்ளார்.

கருணாநிதி கருத்து

அதேபோல 2011-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி, இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர், அன்றைக்கு அமைச்சராக இருந்தார், அவர் உரையாற்றுகையில், பத்திரிகையிலே வரக் கூடிய செய்திகளையெல்லாம் வைத்துப் பேசுவது முறையல்ல. தயவு செய்து ஆதாரம் இருந்தால் பேசலாம் என்கிறார்.

அதேபோல 1998-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி, அன்றைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, பத்திரிகையில் வருகின்ற செய்திகளை வைத்து நாம் இங்கே விவாதம் செய்வது அழகல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

மேலும் தி.மு.க. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அது சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இது சம்பந்தமாக உறுப்பினர்கள் இங்கே பேசுவது சரியாக இருக்காது என்கிற காரணத்தால் தான் அதனை நான் அனுமதிக்க மறுக்கிறேன்.

இவ்வாறு குறிப்பிட்ட சபாநாயகர் அடுத்த நிகழ்வு தொடங்குவதாக அறிவித்தார். வெளிநடப்பில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறிது நேரத்தில் அவைக்குள் வந்து அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். 

Next Story