நீட் தேர்வு விலக்கு பெற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? சட்டசபையில் துரைமுருகன் ஆவேசம்


நீட் தேர்வு விலக்கு பெற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? சட்டசபையில் துரைமுருகன் ஆவேசம்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:00 AM IST (Updated: 16 Jun 2017 1:42 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு விலக்கு பெற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்றும் மசோதாக்கள் ஜனாதிபதி ஒப்புதலுக்கு கூட செல்லாதது ஏன்? என்பது குறித்தும் அமைச்சரிடம் துரை முருகன் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு நீட் தேர்வு தொடர்பாக அரசிடம் தகவல் கோரினார். அப்போது அவர், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சி.பி.எஸ்.சி. கல்வி தரத்திற்கு இருந்தது. இதனை நம்முடைய கிராமப்புற மாணவர்கள் 98 சதவீதத்தினர் எதிர் கொண்டனர். மாநிலக்கல்வி முறைக்கும், மத்திய கல்வி முறைக்கும் வித்தியாசம் இருக்கிறது. நம்முடைய அரசு 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து மாணவர்களை 12-ம் வகுப்பு வரை உருவாக்கி விடுகிறது. ஆனால் நம்முடைய கல்விதரம் சரியில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. இதற்கு என்ன காரணம்? நான் கேட்க விரும்புவது நம்முடைய கல்வி முறையை மாற்றாமல், நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வைப்பதில் என்ன நியாயம்?.

தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதா?, நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் அவர்களை தயார்படுத்துவோம் என்று அமைச்சர் கூறுகிறார், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். இதில் யார் கூறுவது அரசின் நிலைப்பாடாக இருக்கும்?.

ஜனாதிபதி ஒப்புதலுக்கு செல்லவில்லை

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்:-நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. 2 மசோதாக்களை நாங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து இருக்கிறோம். இந்த மசோதா சம்பந்தமாக மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு உடனுக்குடன் நாங்கள் பதில் அளித்து இருக்கிறோம். தற்போது மத்திய அரசின் உள்துறை சட்டப்பிரிவில் மசோதாக்கள் ஆய்வில் இருக்கிறது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு செல்லவில்லை. நாங்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

மாநில கல்வி முறை, மத்திய கல்வி முறை இரண்டுமே தரமானது தான். கற்பித்தல், பாடப்பிரிவுகள், தேர்வு முறைகளில் தான் வேறுபாடு இருக்கிறது. தற்போது நீட் தேர்வு முடிவுகள் 26-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது. நாங்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம். நம்முடைய முதல்-அமைச்சரும் 2 முறை பிரதமரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறார்.

துரைமுருகன் ஆவேசம்

துரைமுருகன்:-இங்கே அமைச்சர் நீட் தேர்வு தொடர்பாக விளக்கம் அளித்தார். கடைசியில் ஜனாதிபதி ஒப்புதலுக்கே செல்லவில்லை என்று கூறி விட்டார். இது எப்படி இருக்கிறது என்றால், ‘ஆபரேசன் சக்சஸ், பேஷன்ட் டெத்’. நீட் தேர்வு விலக்கு பெற இவ்வளவு நாளா என்ன செய்தீர்கள்?, மத்திய அரசிடம் கேட்க வேண்டாமா?. சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.

அமைச்சர் தங்கமணி:-துரைமுருகன் வேகமாக, ஆவேசமாக பேசி உட்கார்ந்து இருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உங்கள் ஆட்சியின்போது மத்திய அரசை வலியுறுத்தினீர்களா?.

அமைச்சர் சி.வி.சண்முகம்:-நீட் தேர்வு வருவதற்கு யார் காரணம்?. முந்தைய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு தான். அப்போது ஏன் நீங்கள் முயற்சி செய்யவில்லை.

துரைமுருகன்:-நாங்கள் செய்யவில்லை என்பதால் தானே உங்களை உட்கார வைத்து இருக்கிறார்கள்? நீங்களும் செய்யவில்லையே?.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

Next Story