நடிகர் சங்க கட்டிடத்துக்காக பாதையை ஆக்கிரமித்ததாக வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு


நடிகர் சங்க கட்டிடத்துக்காக பாதையை ஆக்கிரமித்ததாக வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 16 Jun 2017 10:30 PM GMT (Updated: 16 Jun 2017 6:13 PM GMT)

பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

சென்னை,

சென்னை தியாகராய நகரில் உள்ள வித்யோதயா காலனியைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தியாகராய நகர் அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் வழியின்றி சுற்றிச்செல்ல வேண்டியதுள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை கடந்த மாதம் விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் உத்தரவின்படி வக்கீல் ஆணையர் இளங்கோ, தன்னுடைய ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், 33 அடி பாதை இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.

பாதையை காணவில்லை

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோரது முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி, பொன்வண்ணன், பசுபதி, ஸ்ரீமன், சங்கீதா உள்பட பலர் வழக்கு விசாரணையை பார்ப்பதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘33 அடி பொது பாதையை மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் இந்த பாதையை நடிகர் சங்கத்துக்கு தாரைவார்த்து விட்டனர். கிணற்றை காணவில்லை என்று சினிமா படத்தில் வரும் நகைச்சுவை காட்சியைப்போல, பொது பாதையை காணவில்லை என்று அப்பகுதி மக்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

தள்ளிவைப்பு

நடிகர் சங்கத்தின் சார்பில் மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி வாதிட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள நில வரைபடத்தை தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Next Story