மாநில சட்ட ஆணைய தலைவராக நீதிபதி சி.நாகப்பன் நியமனம் தமிழக அரசு உத்தரவு


மாநில சட்ட ஆணைய தலைவராக நீதிபதி சி.நாகப்பன் நியமனம் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 16 Jun 2017 10:30 PM GMT (Updated: 16 Jun 2017 7:26 PM GMT)

மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.

மாநில சட்ட ஆணையம்

தமிழக அரசு 1994-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, மாநில சட்ட ஆணையம் அமைக்கப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆணையத்தின் தலைவர், 2 முழு நேர உறுப்பினர்கள், 2 பகுதி நேர உறுப்பினர்கள், முழு நேர உறுப்பினர் செயலர் ஆகியோரை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.

இதில், தலைவர் பதவிக்கு, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். அதேபோல, முழு நேர உறுப்பினர்கள் இருவரில், ஒருவர் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியாக இருக்க வேண்டும். மற்றொரு உறுப்பினர் பதவிக்கு, தமிழக சட்டத்துறை செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவரையும், 2 பகுதி நேர உறுப்பினர் பதவிகளுக்கு, மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்களையும் நியமிக்கவேண்டும். உறுப்பினர் செயலர் பதவிக்கு, சட்டத்துறை செயலாளர் அந்தஸ்தில் உள்ளவரை நியமிக்க வேண்டும்.

நீதிபதி சி.நாகப்பன்

இந்த அரசாணையின்படி, கடைசியாக அமைக்கப்பட்ட மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் உள்ளிட்டோர் பதவி, கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில், மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சி.நாகப்பனை நியமித்து, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், சட்ட ஆணையத்தின் தலைவராக நீதிபதி சி.நாகப்பன் பதவி ஏற்கும் நாளில் இருந்து, 3 ஆண்டுகளுக்கு தலைவர் பதவியை வகிப்பார் என்றும் கூறியுள்ளார்.

நீதிபதி சி.நாகப்பன் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர், கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story