மக்களுக்காக செயல்படக்கூடிய ஆட்சியாக தமிழக அரசு இல்லை கனிமொழி எம்.பி. தாக்கு


மக்களுக்காக செயல்படக்கூடிய ஆட்சியாக தமிழக அரசு இல்லை கனிமொழி எம்.பி. தாக்கு
x
தினத்தந்தி 17 Jun 2017 7:34 PM GMT (Updated: 17 Jun 2017 7:34 PM GMT)

மக்களுக்காக செயல்படக்கூடிய ஆட்சியாக தமிழக அரசு இல்லை என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

ஆலந்தூர்,

தி.மு.க. மகளிர் அணி செயலாளரான கனிமொழி எம்.பி., சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு சுயமாக செயல்படவில்லை. இதை மத்திய அரசு இயக்குவதாக தற்போது பாரதீய ஜனதா கட்சியில் உள்ள சில தலைவர்களே ஒத்துக்கொள்ளக்கூடிய நிலை இருக்கிறது. மக்களுக்காக செயல்படக்கூடிய ஆட்சியாக தமிழக அரசு இல்லை.

எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் தந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக கவர்னரை சந்தித்து மனு தரப்படும். தேவைப்பட்டால் ஜனாதிபதியையும் சந்திப்போம் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்து பாரதீய ஜனதா கட்சி தற்போதுதான் எதிர்க்கட்சியினரை சந்தித்து பேச தொடங்கி உள்ளது. எல்லாரும் ஏற்றுக்கொள்ள கூடிய வேட்பாளரை நிறுத்துவதற்கு பிரச்சினை இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு கூறி இருக்கிறது. ஆதார் அட்டை இன்னும் அனைவருக்கும் முழுமையாக கிடைக்கவில்லை. அரசு உதவித்தொகை பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் கட்டாயம் என கூறி உள்ளனர். ஆதார் அட்டை இல்லாதவர்களின் நிலையை மத்திய அரசு நினைத்துப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story