நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரும் மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரும் மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Jun 2017 7:53 PM GMT (Updated: 17 Jun 2017 7:52 PM GMT)

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரும் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், ஊரகம் மற்றும் மலைப் பகுதிகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண்களை வழங்கி மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் சேர்த்தது செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நிலைக்கு காரணம் மாணவர் சேர்க்கை முறையில் மத்திய அரசு கொண்டு வந்த சமூகநீதிக்கு எதிரான விதிகள் தான்.

ஊரகப்பகுதி, மலைப்பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை தமிழக அரசே தீர்மானிக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு, இந்திய மருத்துவக் குழுவும் அறிவித்திருந்த நிலையில், அந்த அதிகாரத்தை தமிழக அரசு முறையாகவும், நெறியாகவும் கையாளத் தவறியதால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது ஊரகப்பகுதி, மலைப்பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை கிட்டத்தட்ட ஐகோர்ட்டு அடையாளம் காட்டியிருப்பதால், மருத்துவ மேற்படிப்பில் சேர்க்கப்பட்ட ஊரக மருத்துவர்களில் பலர் தங்களின் வாய்ப்புகளை இழக்க நேரிடும். இது நல்வாய்ப்புக்கேடானது.

இத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சிக்கலை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் ஒரே கண் கொண்டு தான் பார்க்கும் என்பதால் மேல்முறையீட்டால் எந்த நன்மையும் விளையும் என்று தோன்றவில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் விதத்தில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். அத்துடன், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் ஜனாதிபதியின் ஒப்புதலை உடனடியாக பெற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Next Story