உத்தரபிரதேசம் மாநிலத்தில் சென்னை புதுமண தம்பதி மீது துப்பாக்கி சூடு


உத்தரபிரதேசம் மாநிலத்தில் சென்னை புதுமண தம்பதி மீது துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 19 Jun 2017 3:00 AM IST (Updated: 18 Jun 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசம் மாநிலத்தில், சென்னை தம்பதி மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

சென்னை,

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் ஆதித்யகுமார் (வயது 31). இவர், சென்னை வளசரவாக்கம், ராமாபுரம், ஆனந்தம் நகர், 4–வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி, ராமாபுரத்தில் உள்ள எல்.அன்.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

இவர், அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கர்நாடக மாநிலம், குல்பர்காவைச் சேர்ந்த விஜயலட்சுமி(28) என்ற பெண்ணை காதலித்தார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்தோடு கடந்த மே மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு புதுமண தம்பதிகள், சென்னை ராமாபுரம் பகுதியில் வேறு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். திருமணத்துக்கு பிறகும் இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று வந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆதித்யகுமாரின் அத்தை வீடு உள்ளது. புதுமண தம்பதிகளை அவர் விருந்து அழைத்தார். இதனால் ஆதித்யகுமார், தனது காதல் மனைவி விஜயலட்சுமி மற்றும் நண்பர் சியாம் தேஜா ஆகியோருடன் கடந்த 3–ந் தேதி விமானம் மூலம் ஹரித்துவாரில் உள்ள அத்தை வீட்டுக்கு சென்றார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு புதுமண தம்பதிகள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், நண்பர் சியாம்தேஜா மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஹரித்வார்–டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாகேவாலி போலீஸ் நிலையம் எதிரே சென்று கொண்டு இருந்தனர். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், திடீரென ஆதித்யகுமார் அருகில் சென்று அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கி குண்டு துளைத்ததால் ஆதித்யகுமார், மீரட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அவரது நண்பர் சியாம்தேஜா தெரிவித்தார். மனைவிக்கு கையில் எலும்பு முறிந்தது. கணவன்–மனைவி இருவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story