‘நீட்’ தேர்வை எதிர்க்காததால் அமைச்சரின் பதில் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு
‘நீட்’ தேர்வை எதிர்த்து அழுத்தம் கொடுக்காததால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் பதில் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
சென்னை,
தமிழக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கான மானிய கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:–எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்:– ‘நீட்’ வேண்டாம் என்ற உத்தரவை அரசு போராடி பெறவில்லை. நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டு, அதனால் மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேரமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியதும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். ஆனால் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்யவில்லை.
பின்னர் அவைக்கு வெளியே நிருபர்களிடம், துரைமுருகன் அளித்த பேட்டி வருமாறு:–
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். அதை ஜனாதிபதியின் கவனத்துக்கு தமிழக அரசு கொண்டு செல்லவில்லை.
ஜனாதிபதி கைக்கு போய் சேர்ந்துவிட்டதா என்பதில்கூட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரோ, முதல்–அமைச்சரோ நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
மக்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று கருத வேண்டியது அந்தத் துறை. ஆனால் உடல் நலத்தைக் கெடுக்கும் குட்கா, பான்மசாலா ஆகியவற்றை விற்று பணத்தை பங்கு போட்டவர்களில் அவரது பெயரும் இருக்கிறது. எனவே, அவரது பதில் உரையை புறக்கணித்து வெளியேறினோம். இவ்வாறு அவர் கூறினார்.