சரக்கு, சேவை வரி அமல்; சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் எவ்வளவு?
சரக்கு, சேவை வரி அமல்படுத்தியதற்கு பிறகு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் எவ்வளவு? என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை,
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மக்கள் தொடர்பு மேலாளர் சபீதா நட்ராஜ் கூறியதாவது:–வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் மானியம் உள்ள கியாஸ் சிலிண்டர்கள் கடந்த 30–ந்தேதி வரை அதாவது சரக்கு, சேவை வரி அமல்படுத்துவதற்கு முன்பு வரை ரூ.439–க்கு விற்பனை செய்யப்பட்டது.
சரக்கு, சேவை வரி அமல்படுத்தியதற்கு பிறகு அதாவது கடந்த 1–ந்தேதியில் இருந்து ரூ.23 விலை உயர்ந்து ரூ.462–க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் மானியம் இல்லாத சிலிண்டர் 30–ந்தேதி வரை ரூ.573–க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 1–ந்தேதிக்கு பிறகு ரூ.21 விலை உயர்ந்து ரூ.594–க்கு விற்பனை செய்யப்படுகிறது.
19 கிலோ எடைக்கொண்ட வர்த்தக ரீதியிலான சிலிண்டர்கள் கடந்த 30–ந்தேதி வரை ரூ.1,141–க்கு விற்பனை செய்யப்பட்டது. 1–ந்தேதிக்கு பிறகு ரூ.68.50 விலை குறைந்து ரூ.1,072.50–க்கு விற்பனை செய்யப்படுகிறது.வீடுகளுக்கான 14.2 கிலோ எடைக்கொண்ட சிலிண்டர்களுக்கு கடந்த 30–ந்தேதிக்கு முன்பு வரை எந்தவித வரியும் கிடையாது. தற்போது சரக்கு, சேவை வரி 5 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தான் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலை அதிகரித்துள்ளது. ஆனால் வர்த்தக ரீதியிலான சிலிண்டர்களுக்கு கடந்த 30–ந்தேதிக்கு முன்பு 14.5 சதவீதம் வாட் வரி, 8 சதவீதம் கலால் வரி உட்பட 22.5 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது 18 சதவீதம் சரக்கு சேவை வரி மட்டும் வசூலிக்கப்படுவதால் முன்பை விட தற்போது வர்த்தக சிலிண்டர்களின் விலை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சரக்கு, சேவை வரி அமல்படுத்திய பிறகு மானிய கியாஸ் சிலிண்டர்களின் விலை ரூ.32 வரை அதிகரித்து உள்ளதாகவும், இந்த விலை உயர்வு அதிகம் எனவும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.