பா.ஜ.க. சார்பில் ஜி.எஸ்.டி. வரி ஆலோசகர்களாக மாறுவதற்கான பயிற்சி
பா.ஜ.க. சார்பில் ஜி.எஸ்.டி. வரி ஆலோசகர்களாக மாறுவதற்கான பயிற்சி அளிக்கப்படும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஜி.எஸ்.டி. வரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணையதள சேவை, பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் பற்றிய செல்போன் ‘அப்ளிகேஷன்’ ஆகியவற்றை தொடங்கிவைத்தார். அப்போது மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், செயலாளர் கரு.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையடுத்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
ஜி.எஸ்.டி. வரியை மக்களிடம் வரி குறைப்பு நடவடிக்கை என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இணையதளம் மூலமாகவும், நேரடியாகவும் ஜி.எஸ்.டி. வரி குறித்து தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பொருளாதாரத்தில் நலிவடைந்த பகுதிகளை தேர்ந்தெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அதன்படி சென்னையில் மட்டும் 100 இடங்களை தேர்வு செய்துள்ளோம். இதேபோல தமிழகம் முழுவதும் இடங்களை தேர்வு செய்து வருகிறோம்.ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக இணையதளம் மற்றும் நேரடியாக பயிற்சி அளிக்க உள்ளோம். இதன் மூலம் பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். நாங்கள் அளிக்கும் பயிற்சியை பெறுபவர்கள் ஜி.எஸ்.டி. ஆலோசகர்களாக மாறலாம். இந்த பயிற்சி பெறுவதற்கு கணினியை இயக்குவதற்கு தெரிந்திருந்தாலே போதும்.
http://pmwelfareschemetn.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
கதிராமங்கலம் விவகாரத்தில் பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. மக்கள் மீது அடக்குமுறையை ஏவுவது ஆரோக்கியமான செயல்பாடு அல்ல. ஆனால் தற்போது நிலவும் போராட்ட சூழ்நிலையை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறார்கள். கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவால் நிலத்தடி நீருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அந்த பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் மாதிரி எடுத்து பரிசோதனை செய்து எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தமிழக அரசு அச்சத்தை போக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.