இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்: சென்னையில் நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம்


இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்: சென்னையில் நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம்
x
தினத்தந்தி 6 July 2017 2:15 AM IST (Updated: 6 July 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் அவருடைய நினைவுநாளான வருகிற 21–ந் தேதி திறக்க ஏற்பாடு நடக்கிறது.

சென்னை,

தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ‘நடிகர் திலகம்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர்.

பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசன் கடந்த 2001–ம் ஆண்டு ஜூலை 21–ந் தேதி மரணம் அடைந்தார். அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு அரசிடம் இடம் கேட்கப்பட்டது. அப்போது 2002–ம் ஆண்டு முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே 28 ஆயிரத்து 300 சதுரடி இடம் ஒதுக்கி கொடுத்தார்.

பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி அப்படியே நின்று போனது.  இந்த நிலையில் கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு 26–ந் தேதி சட்டசபையில் 110–விதியின் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, ‘சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்ட இடத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்’ என்றார்.

அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.  முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்–நடிகைகளும் கலந்துகொள்ள உள்ளனர். அமிதாப் பச்சன் போன்ற பிற மாநில நடிகர்–நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்க சிவாஜி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மணிமண்டபத்தில் நிறுவ அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு சிவாஜி சமூகநலப் பேரவையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன் கூறும்போது, ‘மெரினாவில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை, கண்ணகி, காந்தி சிலைகள் அமைந்துள்ள வரிசையில் நிறுவ வேண்டும். இதுதொடர்பாக முதல்–அமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம்’ என்றார்.


Next Story