கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் தமிழகம் வரவில்லை
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் தமிழகம் வந்து சேராததால் ஒகேனக்கல் அருவிகள் தண்ணீரின்றி பாறைகளாக காட்சி அளிக்கின்றன.
பென்னாகரம்,
இந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2,365 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 1,000 கனஅடி தண்ணீரும் கடந்த 30-ந் தேதி திறக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிகபட்சமாக 70 மணி நேரத்தில் பிலிகுண்டுலு வந்தடைவது வழக்கம். ஆனால் கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாக தெரிவித்து 6 நாட்கள் ஆகியும் நேற்று மாலை வரை அந்த தண்ணீர் பிலிகுண்டுலுவிற்கு வந்து சேரவில்லை.
கர்நாடகாவில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளில் விவசாய பணிகளுக்காக தண்ணீர் பாய்ந்து மீதமுள்ள தண்ணீரே தமிழகத்திற்கு வரும். கர்நாடக அரசு தெரிவித்தபடி குறிப்பிட்ட அளவில் தண்ணீர் திறக் கப்பட்டதா? அல்லது அதை விட குறைவான தண்ணீர் திறக் கப்பட்டதா? என்ற கேள்வி தமிழக விவசாயிகளிடையே தற்போது எழுந்துள்ளது.
இந்த நிலையில் பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்தின் அளவு குறித்து மத்திய நீர்பாசனத்துறையினர் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் வினாடிக்கு 120 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த தண்ணீரின் அளவு நேற்று 100 கனஅடியாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் தண்ணீரின்றி பாறைகளாக காட்சி அளிப்பது இன்னும் தொடர்கிறது.