பெண்களின் தன்னெழுச்சி போராட்டங்களை கொச்சைப்படுத்துவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்


பெண்களின் தன்னெழுச்சி போராட்டங்களை கொச்சைப்படுத்துவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 9 July 2017 1:29 AM IST (Updated: 9 July 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

பெண்களின் தன்னெழுச்சி போராட்டங்களை கொச்சைபடுத்தியதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றவை; இத்தகைய போராட்டங்களை பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து நடத்துவது ‘பே‌ஷனாகி’ விட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். பெண்களின் தன்னெழுச்சி போராட்டத்தை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

பா.ம.க. நடத்திய சட்டப்போராட்டத்தின் பயனாக தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகள் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் வலுக்கட்டாயமாக திறக்க முற்பட்டதால் தான் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டது. பொதுவாக குடிப்பது ஆண்களாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும் தான்.

மதுக்கடைகள் வழியாக பெண்கள் செல்லும்போது குடிகாரர்களின் சீண்டலுக்கு ஆளாகின்றனர். இதனால் குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடை திறப்பதற்கு எதிராக பெண்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தியது இயல்பான ஒன்று தான். இதை யாரோ தூண்டிவிட்டு தான் பெண்கள் செய்ததாக முதல்–அமைச்சர் கொச்சைப்படுத்தக்கூடாது. மாறாக பெண்களின் உணர்வுகளை மதித்து செயல்பட வேண்டும்.

அதேபோல், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகளுக்கும், மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கும் எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்துவதையும் அவர் கொச்சைப்படுத்தி உள்ளார். அன்றாடம் உழைத்தால் தான் உணவு என்ற நிலையில் உள்ள மக்கள் தான் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்ளவேண்டும் என்பதற்காக கடைசி முயற்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு போராட்டம் என்பது பொழுது போக்கல்ல.

எனவே, பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமல் மதுவிலக்கு கோரிக்கையாக இருந்தாலும், கதிராமங்கலத்தில் எண்ணெய் கிணறுகளை மூடும் கோரிக்கையாக இருந்தாலும் அதை அரசு நிறைவேற்றவேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story