வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு சட்டசபையில் அமைச்சர் தகவல்


வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு சட்டசபையில் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 13 July 2017 10:45 PM GMT (Updated: 13 July 2017 6:58 PM GMT)

வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.

சென்னை,

2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் நிலோபர் கபில் பதில் அளித்து பேசினார். பின்னர், தனது துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது:-

இணையதள வழக்கு மேலாண்மை அமைப்பு

தமிழ்நாட்டில் கட்டுமான தொழில்களில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்களும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய பயன்கள் பெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு ரூ.26 லட்சம் செலவில் சிறு கணினியினை பயன்படுத்தி தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களிலேயே முனைப்பு பதிவு இயக்கத்தின் வாயிலாக பதிவு மேற்கொள்ளப்படும்.

தொழிலாளர் துறை அலுவலர்களால் பல்வேறு தொழிலாளர் நல சட்டங்களின் கீழ் கையாளப்படும் வழக்குகளின் நிலையினை கண்காணிப்பதற்கும், தீர்வு செய்யப்படுவதை உறுதி செய்யவும் இணையதள வழக்கு மேலாண்மை அமைப்பு ரூ.21 லட்சம் செலவில் புதிதாக ஏற்படுத்தப்படும்.

சிறப்பு புதுப்பித்தல் சலுகை

பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் இயக்கக அலுவலர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.25 லட்சம் செலவில் குறும்படங்கள் தயாரித்து திரையிடப்படும். 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு அவர்கள் இழந்த பதிவு மூப்பினை மீளப்பெற சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.

அகில இந்திய தொழில் தேர்வில் மாநில அளவில் ஒவ்வொரு தொழில் பிரிவிலும் முதல் 25 இடங்களில் தேர்ச்சி பெறும் அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில் உயர்நிலையிலான சிறப்பு பயிற்சி ரூ.57.81 லட்சம் செலவில் வழங்கப்படும்.

திறன் பயிற்சி அளிப்பதிலும், வேலைவாய்ப்பு வழங்குவதிலும் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு ரொக்கத்துடன் கூடிய விருதுகள் ரூ.10 லட்சம் செலவில் வழங்கி கவுரவிக்கப்படும். ராணுவ ஆள்சேர்ப்புக்கான தேர்வுகளை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி ரூ.2 கோடி செலவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் சீ.வளர்மதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தொகுப்பூதியம் உயர்வு

கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் நகர்ப்புறங்களில் 5 கல்லூரி விடுதிகள் 1 கோடியே 67 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக துவக்கப்படும்.

தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு நிர்வாக செலவுகளை மேற்கொள்ள தமிழக அரசு ஆண்டுதோறும் நிர்வாக மானியமாக ரூ.1 கோடி வழங்கி வருகிறது. இந்த மானியம் 2 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்கென தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் 1,338 பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் உள்ளரங்கு விளையாட்டுப் பொருட்களும், மேலும் போதுமான இடவசதி உள்ள 300 விடுதிகளில் வெளியரங்கு விளையாட்டு வசதிகளும் ரூ.49 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 100 மாணவ, மாணவியர் வரை தங்கிப்பயிலும் 1,242 விடுதிகளில் பணிபுரியும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கு, தற்போது வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story