சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை: சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் ஜெ.தீபா அறிக்கை


சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை: சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் ஜெ.தீபா அறிக்கை
x
தினத்தந்தி 14 July 2017 6:06 PM GMT (Updated: 14 July 2017 6:06 PM GMT)

சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் ஜெ.தீபா கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஜெ.தீபா அணி பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;–

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை தேடி இருப்பதை கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜி. ரூபா திவாகர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் டி.ஐ.ஜி. கூறி உள்ளார். இதற்கு பதிலளிக்க முடியாமல் சிறைத்துறை அதிகாரிகள் திணறி வருகிறார்கள். சிறை விதிகளை மீறி பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக அந்த சிறையில் இருக்கும் கைதி மஞ்சுனாத் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிற நிலையில் வெளிப்படையாக மத்திய அரசு வழக்கம் போல் கவனக்குறைவாக இல்லாமல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சிறைத்துறை நடவடிக்கை சம்பந்தமாக கர்நாடகா முதல்–மந்திரி சித்தராமையாவை தேவைப்படும்போது நேரில் சந்திப்பேன்.

இவ்வாறு ஜெ.தீபா கூறியுள்ளார்.

Next Story