கமல்ஹாசனுக்கு எதிராக பேசுவதை அமைச்சர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் வைகோ பேட்டி


கமல்ஹாசனுக்கு எதிராக பேசுவதை அமைச்சர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 16 July 2017 7:45 PM GMT (Updated: 16 July 2017 6:33 PM GMT)

கமல்ஹாசனுக்கு எதிராக பேசுவதை அமைச்சர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று வைகோ கூறினார்.

ஈரோடு, 

ஈரோடு கிழக்கு மற்றும் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது.

நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

முன்னாள் முதல்–அமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு ஆண்டுதோறும் ம.தி.மு.க.வால் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தஞ்சாவூரில் மாநாடு நடத்த ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது. இதற்கான செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டம்தோறும் நடைபெற்று வருகிறது.

‘நீட்’ தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரி நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளில் மத்திய அரசின் போக்கு அதிர்ச்சியை தருகிறது. தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படுகிறது. ‘நீட்’ தேர்வால் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 2 சதவீத மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். மீதமுள்ள 98 சதவீத மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் தான் படித்து வருகிறார்கள்.

‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் அந்த தீர்மானங்களை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டது கண்டிக்கத்தக்கது.

கதிராமங்கலத்தில் போராடியவர்களை கைது செய்தது மட்டுமல்லாமல், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் இருந்து புகார் பெற்று மீண்டும் அவர்கள் மீது தேச துரோகமாக குழாய்களை உடைத்ததாக வழக்கு போடப்பட்டுள்ளது. இது பேராசிரியர் ஜெயராமன் உள்பட பலரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

நடிகர் சிவாஜிக்கு பிறகு கலை உலகில் தலைசிறந்த நடிகர் என்ற இடத்தில் இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கமல் உள்பட யாருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால் கருத்துச்சொல்லும் கமல்ஹாசனை அமைச்சர்கள் வார்த்தைகளால் தாக்குவதும், எச்சரிக்கை செய்வதும் அரசுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த போக்கை அமைச்சர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

Next Story