எந்த சேவையும் செய்யாமல் கமல்ஹாசன் அரசியலுக்கு வர நினைப்பது ஏன்?
‘எந்த சேவையும் செய்யாமல் கமல்ஹாசன் அரசியலுக்கு வர நினைப்பது ஏன்?’ என்று கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கோவை,
பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன சேவை செய்தார்கள்? என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அரசியலில் மக்கள் சேவை செய்யும் தலைவர்கள் ஏற்கனவே உள்ளனர். எந்த சேவையும் செய்யாமல் இருந்த கமல்ஹாசனுக்கு திடீரென்று ஞானோதயம் வருவது ஏன்?
திரைத்துறையில் இருந்தாலும் ரஜினி போல சமூக கருத்துகளை கமல்ஹாசன் இதுவரை வெளிப்படுத்தியது இல்லை. ரஜினிகாந்தை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் இருந்தே சமூக கருத்துகளை பேசி வருகிறார். ஆனால் கமல்ஹாசன் இவ்வளவு நாளாக சமூக பிரச்சினைகளை பேசாமல் தற்போது பேசுவது ஏன்? என்று தெரியவில்லை.
ஒரு ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. அப்போதெல்லாம் கமல்ஹாசன் எவ்வளவு குரல் கொடுத்தார்? அவர் இப்போது திடீரென்று அரசியலுக்கு வர நினைப்பது ஏன்?. சினிமா போல நினைத்துக் கொண்டு ஒருநாள் முதல்வர் ஆகலாம் என்ற கதை அல்ல. அரசியல் என்பது டுவிட்டர் தளத்தில் இல்லை. அது மக்களுடன் நிஜ தளத்தில் இருக்கிறது.தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கண்காணிக்கப்பட கூடியவையாக உள்ளது. மாணவர்கள் மத்தியில் சில சமூக விரோத அமைப்புகள் கலந்திருக்கின்றன. மாணவர் சமுதாயத்திற்குள் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் கலந்து விடக்கூடாது. கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா மாற்றப்பட்டது குறித்து தீர விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.